17.5.14

பெரியார் வாழ்கிறார்...

இப்போதெல்லாம்
குப்பனையும் சுப்பனையும்

கோவில்களுக்குள்
காண முடிகிறது

பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த
பொன்னுத்தாயின் பேத்தி

லண்டனில்
பிசியோதரபி படிக்கிறாள்

வியாதி என்றதும்
மந்திரித்து

தாயத்துக் கட்டிய கைகளில்
மருந்துச் சீட்டுகள்

மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம்
கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப்

பணிவோடு காட்டுகிறார்
கணேச அய்யர்

வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்தும்
தேங்காயைத் தட்டிப் பார்த்தும்

கொள்முதல் செய்யும் கணவர்கள்
உழவர் சந்தைகளில்

மொட்டை போட்டிருந்த
நண்பன் ஒருவனிடம்

கோவிலுக்கா என்றேன்
சம்மருக்கு என்றான் சாதாரணமாக

மேலத் தெருவில்
கீழத் தெருக்காரர்களின்

பாலிஷ் செய்யப்பட்ட
பாதுகைகளின் தடங்கள்

வெண்ணிலாவின்
மதிப்பெண் அட்டையில்

அம்மா பெயரின் முன்னெழுத்தும்
மின்னிச் சிரிக்கிறது

கழுத்துக் கயிற்றின்
மதச் சின்னங்கள்

காலாவதி ஆகிப் போய்
சில்வர் செயினில்
'Love' 'Cool' வாசகங்கள்

தொலைக்காட்சியின்
சமையல் நிகழ்ச்சிகளில்

தொகுத்து வழங்கும் பெண்களையும்
சமைத்துக் காட்டும் ஆண்களையும்

எவரும் விகாரமாய்ப் பார்ப்பதில்லை

சாலைகளில் முளைத்த
'வழி'பாட்டுத் தலங்கள்

அவ்வப்போது
நகராட்சியின் புல்டோசருக்கு இரையாகிறது

மதத்தை ஜாதியை முன்னிறுத்தும்
அரசியல் அமைப்புகள் யாவும்

பெரியாரின் மண்ணில்
மண்ணையே கவ்வுகின்றன ....

நன்றி..

-ஓவியச்செல்வன்-

No comments:

Post a Comment