17.5.14

கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள். கஷ்மீரிகளின் வார்த்தைகளில்....



திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும்செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.

நேரடி களத்தொகுப்பு - அண்ணன் தமீமுன் அன்சாரி. (இணையத்திலிருந்து )

No comments:

Post a Comment