பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காய் எந்த ஒரு நன்மையையும் செய்யாத, அவர்களுக்கு ஆதரவாய், முன்னேற்றத்துக்காய் சிறு துரும்பையும் எடுத்து போடாத மோடி, இப்போது, நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்று வேடம் போடுகிறார். இந்தியாவில் சுமார் 60% சதம் உள்ள OBC மக்கள், மத்திய அரசு பணிகளிலும், பல வட மாநில அரசு பணிகளிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வெறும் 8% சதவீத அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்காய் மூன்று முறை முதல்வராய் இருந்த மோடி செய்தது என்ன?
தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால், விமர்சித்து விட்டார் என்று பிரியங்கா மீது குற்றம் சுமத்தி உத்தரபிரதேசம் தோமாரியாகஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.
குஜராத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த மாதவ் சிங் சோலங்கியின் ஆட்சியில் 1980-களில், கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கத்தில் தீவிரமாக இருந்த மோடி இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?
மண்டல் குழு பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதை தொடர்ந்து, வட நாட்டில், இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களால் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்த பிற்படுத்தப்பட்ட மனிதர் மோடி எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருந்தார்?
வி.பி.சிங்கிற்கு எதிராக ரத யாத்திரை என்ற பெயரில் சமூக அநீதித் தீயை அத்வானி கொளுத்தியபோது, ரதத்திற்கு எண்ணெய் விட்ட மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?
2005-ல் மத்திய அரசில் அர்ஜீன் சிங், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியபோது, எந்த ஆதரவும் தராத மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?
உண்மையில் பிரியங்கா சொன்னது, இவர்கள் எனது தந்தையை விமர்சிக்கிறார்கள்; அமேதி மக்கள் இந்த கீழ்தரமான அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என பேசினார். ஆனால், மோடி, இதனை, ஜாதி சாயம் பூசி, தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால், தன்னை தாக்குவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், ராமன் படத்தை வைத்து, ராம ராஜ்யம் அமைக்க வாக்களியுங்கள் என மதத்தின் பெயரால், வாக்கு கேட்ட மோடி, இப்போது, ஜாதியைப் பற்றி பேசுகிறார்.
சரி; ராம ராஜ்யத்தில், இந்த பிற்படுத்தப்பட்ட சூத்திர மக்களுக்கு என்ன கதி என மோடிக்குத் தெரியுமா? சம்பூகன் தவம் இருந்தான் என்பதற்காக, தர்மம் கெட்டுவிட்டது எனக்கூறி, சம்பூகன் தலை வெட்டப்பட்டது என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதே, அதைப் பற்றி தெரியுமா, மோடிக்கு?
அந்த ராமாயாணத்தையும், ராமனையும் தலையில் வைத்து வன்முறை ஆட்டம் ஆடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தில் பயிற்சி பெற்ற மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று.
கோல்வார்க்கரின் சிந்தனையின் தொகுப்பில், சூத்திரர்களுக்கு என்ன நிலை என்று சொல்லப்பட்டிருக்கிறதே; அதனை இத்தனை காலம் ஏற்றுக்கொண்டு, அந்த ஆர்.எஸ்.எஸீல் இருந்ததை பெருமையாக கருதும் மோடி சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?
சமூக நீதியின் எந்த உணர்வும் இல்லாதவர்; அதற்கு எதிரான தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை பெருமையாக கருதுபவர்; இப்போது சொல்கிறார் தான் பிற்படுத்தப்பட்டவன் என்று.
(முகநூல் நண்பர் பிரகாஷ் ஜேபி அவர்களின் பக்கத்திலிருந்து)
No comments:
Post a Comment