4.5.14

"தமிழ்நாடு தமிழருக்கே" - தந்தை பெரியார்

(செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள். நம் அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தவர் பிறந்த நாள்! அவர்தாம் நமக்குத் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற அரசியல் முழக்கத்தைத் தந்தவர். அதனாலேயே அவரைத் தமிழ்த்தேசத் தந்தையெனப் போற்றுகிறோம். அவரின் பேச்சிலிருந்தும் எழுத்திலிருந்தும் சிலவற்றைத் தொகுத்து கீழே தந்துள்ளோம். இன்றும் அவர் கருத்துகள் பொருத்தமாகவும் அனல் தெறிப்புகளாகவுமே உள்ளன. இவை தோழமை வெளியீடான ”சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.)
ஏக இந்தியா விரும்பிகளே! இதற்கென்ன பதில் கூறுகிறீர்கள்?
தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும், நேர்மைக்கும் நிர்வாகத் திறமைக்கும், ஜனநாயகத்திற்கும், பாதுகாப்பிற்கும், பலத்திற்கும் சிறப்பான பேர் போன ஆட்சி ?
வரலாற்றுப்படி நாம் டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு, ஏதாவது ஆதாரங்கள் உண்டா?
56 நாடுகளில் நாம் ஒரு நாட்டாராய் இருந்துவந்தவர்கள்!
வெள்ளைக்காரன் வியாபார நிமித்தம் இங்கு வந்து பல பகுதிகளில் இருந்த நாடுகளையும் பிடித்துத் தனது சவுகரியத்தை முன்னிட்டு இதை ‘ஒரு குடைக்கீழ்’ கொண்டுவந்தானே தவிர, அதற்கு முன்பு எப்போதாவது டெல்லியை எஜமானனாகக் கொண்டு தமிழ்நாடு இருந்தது என்று சரித்திரத்தைப் புரட்டிக் காரணம் காட்ட முடியுமா? ‘காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி’ வரை என்ற சொற்றொடருக்கு அய்க்கியப்பட்ட ஒரே நாடு இந்தியா என்ற பொருள் இதற்குமுன் எப்போதாவது இருந்திருக்கிறதா? அல்லது புராணப்படியோ, இதிகாசப்படியோ ஒரே நாடாக இருந்திருக்கிறதா? ‘சுயம்வரத்திற்குக்கூட 56 தேசத்து ராஜாக்கள்’ வந்திருந்தார்கள் என்றுதான் அவைகள் கூறுகின்றன. இராமாயணத்தில் வில் உடைப்பதற்குக்கூட பல தேசத்து ராஜாக்கள் வந்தார்கள் என்று இல்லையா?
ஆகவே அப்போதும்கூட பற்பல ராஜியங்கள், அவைகளுக்குத் தனித்தனி எல்லைகள், ராஜாக்கள் இருந்திருக்கின்றன என்றுதானே அறிகிறோம்.
பூகோளப்படி எந்த நாடாவது 2000 மைல்களுக்கு அப்பால் எஜமான ஆட்சியை வைத்திருப்பதும், எதற்கெடுத்தாலும் அங்கு ஓடி ஓடி, கருத்தும் உத்தரவும் என்ன என்று தெரிந்து, பிறகு செயலாற்றும் தன்மையைக் கொண்டுள்ளதா? எந்த வகையில் இது சரியானதாகும் ?
கலாச்சாரப்படியாவது டெல்லி எஜமான ஆட்சிப்பீடக்காரர்களாகிய அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா ? உணவில், உடையில், மொழியில் எல்லாவற்றிலுமே ஒன்றுக்கு மற்றொன்று ஏறுமாறான நிலை!
ஆகவே, வரலாற்றுப்படியும் காரணமில்லை; பூகோளப்படியும் காரணமில்லை; புராணப்படியும் காரணமில்லை; கலாச்சாரப்படியும் காரண மில்லை;
சூத்திரத் தன்மை எப்போது நீங்கும்?
இன்றைய ஆட்சிக்கு ஜனநாயகம் என்று பெயர் சொல்லப்பட்டாலும், வேசிக்கு தேவதாசி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது போல், சர்வாதிகாரியாக ஒரு பார்ப்பானே இருந்து வரும் படியான ஆடசித் தன்மைக்கு ‘ஜனநாயகம்’ என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விளக்கிச் சொல்ல வேண்டுமானால் இன்றைய ஜனநாயகத்தில் ஒரு பார்ப்பான்தான் பிரதம (மந்திரி) ஆட்சி ஆளனாகவும் ஒரு பார்ப்பான்தான் பிரசிடெண்டாக, ஆட்சியாளனாக வர முடியுமே அல்லாமல் இந்த இந்தியக் கூட்டாட்சி என்பது உள்ளவரையில் ஒரு தமிழனும் ஒருநாளும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும் வரை தமிழன், தமிழ்நாடு ஒருநாளும் சூத்திரத்தன்மையில் இருந்து, அடிமைக்குடியாய் இருப்பதிலிருந்து கடுகளவும் மாற்றமடைய முடியாது.
ஆகவே இந்தப் பெருங்கேட்டிலிருந்து தமிழ்நாடும் தமிழனும் தப்பிப்பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால் இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியில் விலகி, தமிழ்நாட்டைச் சுதந்தரத் தமிழ்நாடு ஆக ஆக்கிக்கொண்டாலன்றி, வேறு எக்காரணத்தாலும், எக்கிளர்ச்சியானாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறேன்.
தியாகம் என்பது சிறைத்தண்டனை அனுபவிப்பதுதான் என்று பலர் கருதிக்கொண்டு இருக்கிறார்கள். தியாகம் என்பது தன்னலமறுப்பு என்ற பொருளைக் கொண்டதாகும். தன்னலமறுப்பு என்பது தனது உயிரைப் பலிகொடுப்பது என்பதை இறுதியாகக் கொண்டதாகும். இப்படிப்பட்ட தன்னலமறுப்புக் கொண்ட ஒரு ஆயிரம் வீரர்கள் முன்வந்தால்தான் தமிழ்நாடு சுதந்தரத் தமிழ்நாடாக ஆக முடியும்.
இழிவை ஒழிக்க நாடு கேட்கிறோம்
“மனித சமுதாயத்திற்குப் பாடுபடும் நாம் கீழ் சாதியாம்! தீண்டப்படாதவர்களாம்! சோம்பேறிப் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாம்! என்ன கொடுமை!
நம்முடைய காலத்தில் நாம் கீழ்சாதியாக இருந்துவிட்டாலும், நம்முடைய சந்ததிகளாவது மனிதனாக வாழ வேண்டுமே என்ற எண்ணத்தின் பேரில்தான் இந்த இழிவை ஒழிக்கப் பாடுபடுகிறோம். நாங்கள் யாரையும் கொள்ளையடிக்கப் பேசவில்லை; எந்த நாட்டையும் பிடித்து ஆளவேண்டுமென்ற ஆசையும் இல்லை. நாங்கள் கீழ்சாதி மக்களாக இருக்கக்கூடாது என்பதற்காகவே எங்கள் நாட்டை நாங்களே ஆளவேண்டும் என்கிறோம். இது எப்படித் தவறாகும்?
இந்திய யூனியன் ஆட்சி என்பது (இந்து) மதப்பாதுகாப்பு ஆட்சியே!
இந்து மதத்தின் கடைசி வேர் இருக்கும்வரை இந்த நாட்டு மக்களைப் பிடித்துள்ள ‘சூத்திரப் பட்டம்’ ஒழியாது; நிச்சயம் ஒழியாது!
ஆனால் இன்று நடக்கும் இந்திய யூனியன் ஆட்சி என்கிற பச்சைப் பார்ப்பன மனுதர்மவாதிகளின் ஆட்சியில் இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் “மதம் மனிதனது சொந்த விஷயம்” என்ற பாவனையில் கூட அரசாங்கம் நடப்பதில்லை. இதற்குப் பிரத்யட்சமாகப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
1. இந்திய அரசியல் சட்டம் என்கிற பார்ப்பன நவீன மனுதர்மச் சட்டம் எல்லோருக்கும் மத சுதந்திர உணர்வை அளித்திருக்கிறது. அதன்படி இந்து மதக்காரன் சுதந்தரமாக இன்னொருவனைப் பார்த்து நீ கீழ்சாதி, இழி சாதிக்காரன், சூத்திரன், பஞ்சமன் என்று கூறினால் மற்றவனும் ஆம் என்று தலையசைப்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்? கூறுவதற்கு உரிமையும் இல்லை. (இந்துலாவே இதற்கு ஆதாரம்)
2. இந்திய அரசாங்கத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் இதை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் என்பதாகக் குறிப்பிடுவார்கள். அத்தகையோர்களைப் பார்த்து நான் வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுவதெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தில் எந்த ஒரு இடத்திலாவது இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதா? சட்ட நிபுணர்களே ஆராய்ந்து பாருங்கள். (மதச்சார்பு ஆட்சி என்பதற்கு, அரசியல் சட்டமே ஆதாரம்)
இந்தக் கேள்விக்கு நேற்று முன்தினம் உதகையில் டாக்டர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் பதில் அளித்திருக்கின்றார். “நமது அரசியல் சட்டத்தில் இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று எந்த இடத் திலேயும் குறிப்பிடப்படவில்லையே?” என்று சொல்லிவிட்டார்.
ஓட்டுக்காரனே உணர்ந்துபார்!
“நாடு பிரிய வேண்டியதுதான். அதை நாங்கள் ஒப்புக்கொள்ளுகிறோம். அதற்காகத்தான் சட்டசபைக்கும் பார்லிமெண்டுக்கும் போக வேண்டுமென விரும்புகிறோம்” என்று சொல்லுகிற சட்டசபை ‘சர்வரோக நிவாரணி’க்காரர்களைப் பார்த்து நான் வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்ளுவதாவது; “சட்டசபைவாதிகளே! நீங்கள் சட்டமன்ற நாற்காலியில் உட்காருவதற்கு முன், உள்ளே நுழைந்த உடன், “அ, ஆ என்னும் நான் சட்டசபையின் ஓர் அங்கத்தினனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறபடியால் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் அமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருப்பேன் என்றும், ‘நான் இப்போது ஏற்கப்போகும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன்’ என்றும் கடவுள் பெயரால் சத்தியம் செய்கிறேன். மனப்பூர்வமாய் உறுதி கூறுகிறேன்” என்று சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தீர்களே! அந்தச் சட்டப்படி நாட்டுப் பிரிவினையை வலியுறுத்த முடியுமா? அதுவே அரசியல் சட்டத்திற்கு விரோதமல்லவா? இல்லை; இல்லை! அது பொய் சத்தியம்தான் என்றாலும் புளுகினாலும் அதை (நாட்டுப் பிரிவினையை) வலியுறுத்தும வாய்ப்பும் வசதியும் பார்லி மெண்டிலோ, சட்டசபையிலோ இருக்கிறதா? தீர யோசித்துப் பாருங்கள்!
டெல்லியில் உள்ள பார்லிமெண்டின் பிரதான சபையான மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை 506 பேர்கள். சென்னை ராஜியம் என்று அழைக்கப்படும் நம் தமிழ்நாட்டிற்கு உள்ள பிரதிநிதி 41 பேர்கள். அதாவது 8% பேரே! நாடு பிரிய வேண்டும் என்று சொல்லுபவர்களாலேயே இந்த 8% (பார்லிமெண்டு சபையின் விகிதாசாரத்தில்) இருந்தாலும் இவர்களால் என்ன செய்ய முடியும்? எப்படித் தீர்மானம் கொண்டு போக முடியும்? சாத்தியக் கூறுகள் உண்டா?
எந்தக் காலத்தில் 41 பேர்களும் ஒரு கட்சிக்காரர்களாகவே போய் உட்காருவது? ‘அகில இந்தியா’ கட்சிக்காரர்கள் ஒப்புக் கொள்ளுவார்களா பிரிவினையை? தேர்தலுக்குத்தான் நேசக்கரக்தை நீட்டலாமேயழிய இலட்சியத்திற்கு அவர்களை நம்பினால் மோசம்தானே வரும்? கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்குப் பிடிக்கப் பார்க்கிறாய் என்றுதானே சொல்ல வேண்டும்?
சென்னை மட்டுமல்ல, கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய நாடுகளைச் சேர்த்தால் கூட சென்னை41 (மெம்பர்கள்), கன்னடம் 26 (மெம்பர்கள்), கேரளம் 18 (மெம்பர்கள்), ஆந்திரம் 43 (மெம்பர்கள்), ஆக 128 பேர்கள்தான். இந்த 128 பேரும் சேர்ந்து முட்டினாலும்கூட நாடு பிரிக்க முடியுமா?
இதையும் பாருங்கள்: தமிழ்நாடு 41, கேரளம் 18, கன்னடம் 26, ஆக 85. ஆனாலும் பிரதம ஆட்சியாளர்களான பண்டித நேரு, பண்டித் பந்த் ஆகியோர்களைக் கொண்ட ராஜியமான உத்தரப் பிரதேசத்திற்கு மட்டுமே 86 பேர்கள் இருக்கிறார்கள். ‘இந்தியக் கூட்டாட்சி’யின் தலைவிதியை நிர்ணயிக்கும் ராஜியம் என்ற பெயர் எடுத்துள்ள ராஜியம் உத்திரப் பிரதேசமாகும்.
பார்லிமெண்டில் நாட்டுப் பிரிவினைக்காரர்களாகிய நீங்கள் எந்தக் காலத்தில் எப்படித் தீர்மானம் கொண்டு போய் மந்திரிகள் கண்ணில் விரலை விட முடியும்? வாய் வீச்சும், வீரப்பிரதாபமும் வெளியில் தான்; உள்ளே முடியுமா?
மனு ஆட்சி ஒழிய வேண்டாமா?
இப்போது இங்கிருக்கிற சட்டம் இந்துலா என்றால் அது மனுதர்மந்தான். அதேபோல் இந்திய அரசியல் சட்டம் என்றால் அதுவும் மனுதர்மந்தான்.
நாங்கள் எதற்காக இந்த மனு ஆட்சியில் இருக்க வேண்டும்? எங்கள் நாடு எங்களிடமிருக்க வேண்டும் என்று சொல்வது தப்பா? இத்தனை நாளாக உன் ஆட்சியிலே எங்கள் நாடு இருந்ததினால் இது சுடுகாடாகப் போனதைத் தவிர வேறு என்ன லாபத்தைக் கண்டோம்? காட்டுமிராண்டிகளாக நம்மை வைத்திருப்பதைத் தவிர நமக்கு அறிவுச் சுதந்திரம் கொடாமல் அடக்கி ஆளுவதைத் தவிர இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது?
அன்னியன் சுரண்டலுக்கு இடம் கொடோம்
இந்த நாட்டை நம் நாட்டான் அல்லாத இன்னொரு நாட்டான், இன்னொரு நாட்டிலிருந்து கொண்டு ஆளக்கூடாது. சுரண்டக்கூடாது என்று சொல்லுகிறோமேயழிய வேறு ஒன்றுமில்லை.
இந்த நாடு சுதந்திரமான நாடான நிலையில் பார்ப்பான் ஆண்டால்கூடப் பரவாயில்லை. அவனுக்கு இந்த நாட்டின் மீது பற்று இருக்குமானால் சரி ஏன் இந்த இராஜகோபாலாச்சாரியே வேண்டுமானாலும் ஆளட்டுமே!
ஆண்ட பரம்பரையை அண்ட வந்தவன் விரட்டுவதா?
நீ (நேரு) 35 கோடி மக்களுக்குப் பிரதமர் என்று சொல்லி வெளிநாட்டில் மரியாதை, ஆடம்பரமான வரவேற்பு எல்லாம் பெற்றுக்கொள்ள உனக்கு இந்த நாடு ஒன்றாக இருந்தால் லாபம். அதனால் எங்களுக்கு என்ன லாபம்? நாங்கள் உன் ஆட்சிக்குக் கீழே இருக்கிற வரையில் தேவடியா மகனாகவே சூத்திரர்களாகவே இருக்கனும் என்பதை தவிர வேறு என்ன?
இந்தக் காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்த நேரு சொன்னார், முன்பு சட்டத்தை எரித்த, என்னைப் பார்த்து உனக்கு இந்த ஆட்சி பிடிக்காவிட்டால் நீ மூட்டை முடிச்சுகளோடு இந்த ராஜ்யத்தைவிட்டுப் போக வேண்டுமென்று. இவர் அப்பன் வீட்டு ராஜ்யமா?
இவர்களாவது பரம்பரைக் கருமாதி பண்ணிப் பிழைத்துக்கொண்டு இருந்த குடும்பம். என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா? இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டியன், நாய்க்கன் ஆண்டு இருக்கிறானே! விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருந்திருக்கிறானே! இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது. ஆண் டதற்குச் சின்னங்கள் இருக்கிறதே மறுக்க முடியுமா? நம்ம மக்கள் உடம்பிலே ரத்தம் இருந்தால் இப்படிப் புரோகிதப் பார்ப்பனர் கையிலா ஆட்சியிருக்கும்?
தமிழ்நாடு பிரிந்தால் ஏன் வாழாது?
அய்க்கிய நாடுகள் சபை என்கிற உலக நாடுகளில் பெரும்பான்மை கொண்ட சபையில் இதுவரை 82 நாடுகள் அங்கள் வகிக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை நம் நாட்டைவிடப் பரப்பிலும், ஜனத்தொகையிலும் சிறியவைகள்தானே? அச்சிறு நாடுகள் சுதந்திரமான நாடுகளாக இருப்பதோடு, அய் நா. சபையில் அங்கம் வகிக்கும் யோக்கியதையையும் பெற்றிருக்கின்றனவே?
உதாரணத்திற்கு ஒரு சில, அருள்கூர்ந்து ஆழ்ந்து படித்துச் சிந்தியுங்கள்!
1. டொமினிஷியன் குடியரசு என்று ஒரு நாடு மத்திய அமெரிக்காவில் உள்ளது. இதன் பரப்பு 19,322 சதுர மைல்கள்; ஜனத்தொகை 2 கோடியே 40 லட்சம். அய்க்கிய நாடுகள் சபையில் உள்ள 82 நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
2. சால் வெடார் என்ற ஒரு நாடு, அதன் பரப்பளவு 13,176 சதுர மைல்கள்; ஜனத்தொகை 3 கோடி 51 லட்சம். இதுவும் அய்.நா.சபையில் உள்ள ஒரு நாடு.
3. கவ்ட்டி மேலா என்ற ஒரு நாடு, அதன் பரப்பளவு 42,042 சதுர மைல்கள்; ஜனத்தொகை 32 லட்சம். இதுவும் அய்.நா.சபையில் அங்கம் வகிக்கிறது
4. ஆண்டூதாஸ் என்று ஒரு நாடு, அதன் பரப்பளவு 43,227 சதுர மைல்கள்; ஜனத்தொகை 1 கோடி 60 லட்சம். இதுவும் அய்.நா.சபையில் இடம்பெற்றுள்ள ஒரு நாடு.
5. அய்ஸ்லாந்து என்ற ஒரு நாடு, அதன் பரப்பளவு 40,500 சதுர மைல்கள்; ஜனத்தொகை 1 லட்சத்து 56 ஆயிரம். இதுவும் அய்.நா.சபையில் உள்ள ஒரு நாடு.
6. அயர்லாந்து நீண்ட காலம் இங்கிலாந்தோடு இணைந்திருந்து பிரிந்த நாடு; 1949இலிருந்து அய்ரிஷ் குடியரசு என்ற பெயரில் சுதந்தர நாடாகவே இருந்து வருகிறது. அதன் பரப்பளவு 26,600 சதுர மைல்கள்; ஜனத்தொகை 3 கோடி.. இதுவும் அய்.நா.சபையில் உள்ள ஒரு நாடாகும்.
7. இஸ்ரேல் என்ற யூதநாடு, 1948இல் ஏற்பட்ட தாகும். அதன் பரப்பளவு 8,048 சதுர மைல்கள்; ஜனத்தொகை 1 கோடி 72 லட்சம் மக்கள். இந்த நாடும் அய்.நா.சபையில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும்.
8. லெபனான் என்ற ஒரு நாடு, அதன் பரப்பளவு 4000 சதுர மைல்; ஜனத்தொகை 1 கோடியே 43 இலட்சம். இந்நாடும் அய்.நா.சபையில் இடம் பெற்றுள்ள ஒரு நாடாகும்.
9. ஜோர்தான் என்று ஒரு நாடு, அதன் பரப்பளவு 37,700 சதுர மைல்கள்; ஜனத்தொகை ஒன்றரைக் கோடி. இதுவும் அய்.நா.சபையில் இடம்பெற்றுள்ள இன்னொரு நாடு.
10. போர்ச்சுக்கல், இந்த நாட்டின் பரப்பளவு 34,500 சதுர மைல்கள்தான். இதுவும் அய்.நா.சபையில் உள்ள ஒரு நாடு.
11. லக்சம்பர்க் என்ற ஒரு நாடு, இதன் பரப்பளவு 999 சதுர மைல்கள; ஜனத்தொகை 31,000
12. சான்மாரியானோ என்னும் ஒரு நாடு, ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளிலேயே மிகப்பழைய நாடு. அதன் பரப்பளவு 38 சதுர மைல்கள்.; ஜனத்தொகை 13,500.
13. போப்பாண்டவர் வசிக்கும் வாட்டிகன் நகரம் இத்தாலியில் உள்ள ஒரு நாடு. அதன் பரப்பளவு 109 ஏக்கர். ஜனத்தொகை 947 பேர்.
14. மொனாக்கோ மத்தியதரைக் கடலில் உள்ள ஒரு நாடு. அங்கு உள்ள மித சீதோஷ்ண நிலையை விரும்பி வெளிநாட்டுக்காரர்கள் பலர் அங்குச் செல் கிறார்கள். அதன் பரப்பளவு 06 சதுர மைல்கள். அதாவது முக்கால் சதுர மைலுக்கும் குறைவு; ஜனத்தொகை 2,102.
நாம் கேட்பது தனிநாடே
இன்னொன்றையும் விளக்க வேண்டும். அதாவது முன்பு திராவிட நாடு கேட்டார். இப்போது அதை விட்டுவிட்டார். தமிழ்நாடு கேட்கிறார் என்று சிலர் சொல்லுவார்கள். இது பெரும்பாலும் குறும்புக்காகக் கேட்கப்படுகின்ற கேள்வியாகும். தமிழ்நாடு என்பதும் திராவிடநாடு தான். முன்பு தெலுங்கன், மலையாளி, கன்னடியன் எல்லாம் நம்முடன் சேர்ந்து இருந்தான். அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி நாம் திராவிடநாடு என்று சொன்னோம். இப்போது அவனவன் பிரிந்து அவனவன் தனித்தனி நாடு பெற்று இருக்கின்றான். தமிழ்நாடு என்று சொல்லும்படியாக இப்போது இருக்கிறது. ஆகவே ‘தமிழ்நாடு’ என்று சொல்லுகிறோம்.
கூட்டாட்சியின் கேடுகள்
இப்போது திராவிடநாடுதான், மற்ற நாலு நாடுகளும் சேர்ந்ததுதான் வேண்டும் என்ற உணர்ச்சி உண்டா? ஏற்பட்டிருக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியே திராவிடநாடு பிரிந்தால் நமக்கு என்ன லாபம்? இன்று எப்படி தமிழ் நாடு, பார்லிமெண்ட்டில் மற்ற 14 நாட்டுக்கும் அடிமை யாக இருக்கிறதோ, அதேபோல் நாளை மற்ற 3 நாடுகளுக்கும் அடிமையாகத்தான் இருக்க வேண்டி வரும்.
தமிழ்நாடு 3 கோடி ஜனத்தொகை மலையாளி 1.25 கோடி கன்னடியன், 2 கோடி ஆந்திரக்காரன் 3.5 கோடி இவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நிலை? அவர்கள் 6.75 கோடி; தமிழன் 3 கோடி; நாம் மற்றவர்களுக்கு மைனாரிட்டியாகத்தானே இருப்போம்?
அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பார்லிமெண்ட் மெம்பர்கள் 87 பேர்கள். நம் தமிழ்நாட்டிற்கு 41 பேர்கள்தான். அதே மாதிரி சட்டசபை மெம்பர்கள், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் சுமார் 600 பேர்கள். நமக்கு 207 தான்.
மற்றபடி கடவுள், மத சாஸ்திர இழிவு ஒழிப்பு உணர்ச்சியோ, இந்தியை எதிர்க்கும் உணர்ச்சியோ அந்த நாட்டுக்காரர்களுக்குக் கிடையாது. அப்புறம் எதற்காக ஒரே ராஜ்யம்? எதற்காகக் கூட்டு வேணும்?

No comments:

Post a Comment