காலையிலிருந்து இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்துக் கொண்டிருக்கிறது.
01. இரண்டு நாட்களுக்கு முன்னர் திரைப்பட துணை இயக்குனர் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியாமல், தெரிந்த பின்னர் மருத்துவம் பார்க்க வசதியின்றி இறந்து போனார் என்பதும்; இந்த வாரம் பிரபல நடிகர் ஒருவருக்கு கதை சொல்ல அவருக்கு சந்திப்பு நிச்சயமாகி இருந்ததாகவும் கேள்விப்பட்ட செய்தி.
02. நான் தற்போது பணிபுரிந்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் set asst-ஆக பணிபுரிந்த "கணேசன்" என்பவருக்கு இதயத்தில் ஏதோ அடைப்பு இருப்பதாகவும் அதற்கு 5 லட்சம் செலவாகும் என்றும் மதுரையில் ஒரு மருத்துவமனையில் ICU-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கேள்விப்பட்ட செய்தி. கணேசன் நல்ல வேலைக்காரன். இப்போதுதான் திருமணமாகியிருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக வேலை செய்வார். யார் எவ்வளவு கடுமையாக வேலை வாங்கினாலும் முகம் கோணாமல் உடனடியாக சிரித்தபடியே செய்துவிடுவார்.
ஒரு சாமானிய திரைப்பட தொழிலாளிக்கு நேரும் இந்நிலைமை மிகப்பெரிய பேரிடி. மனம் இன்று மிகவும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது. எந்த முன்னேற்பாடுமின்றி; பட்டம்போல் வாழும் எனக்கும் நாளை இப்படி நேரலாம். தினசரி செய்தித்தாள்களில் வெளியாகும் இப்படியான செய்திகளை வேகமாகக் கடந்துவிட பழகிப்போன மனசு, நெருங்கிய வட்டத்தில் நடந்தேறும் துயரங்களிலிருந்து எதிர்காலத்தின் மீதான எச்சரிக்கைகளையும் சேர்த்தே உள்வாங்கிக் கொள்கிறது.
இயற்கை, ஈவிரக்கம் இல்லாததோ..!
No comments:
Post a Comment