13.5.14

திராவிட எதிர்ப்பு

திராவிடம் எனச்சொல்லிக்கொண்டு தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கங்கள் மீதுதான் நமது கோபம் இருக்கவேண்டும். "பதவிக்கு வந்தால் எப்பேர்ப்பட்ட யோக்கியனும் அயோக்கியனாகவே மாறுவான்" என்றார் பெரியார். எவ்வளவோ மாற்றங்கள் அவரால் நிகழ்ந்துள்ளது. அவரைத் தவிர்த்துவிட்டு அவரை எதிர்த்துகொண்டு நாம் அடையப்போவது ஒன்றுமில்லை. ஆரியர்கள் இதற்காய் காத்திருக்கிறார்கள். இந்த மண்ணுக்கு பெரியாரைக் கடந்த முற்போக்கென்று ஒன்றுமில்லை. அவர் ஒரு மாபெரும் சமுதாய சீர்திருத்தவாதி. அரசியல் கழிவுகளோடு அவரை இணங்காணாதீர். சாதி வெறியர்களும் இதே தமிழ்தேசிய போர்வையிலிருந்து வெளியே உலவத் தொடங்கியிருக்கிறார்கள். நாளை தேர்தல் அரசியலுக்கு வரும் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இதே அளவுகோலைத்தான் மக்கள் வைப்பார்கள். திராவிட இயக்கங்களில் தமிழரல்லாதோர் ஆதிக்கமென்றால் அவர்களை அடையாளப்படுத்தி அப்புறப்படுத்துவதே சரியான அரசியல். தமிழ் ஆளுமையின் உடனான திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் தோழமைப்படுத்த வேண்டும். இல்லாவிடில் சாதீயக் கலவரங்களைத்தான் விரைவாய் அழைத்துவரும் இவ்வரசியல். மீண்டும் ஆரிய அடிமைத்தனத்திற்கே வழிகோலும்.

சில தமிழ் அமைப்புகள் பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. அவர்களின் பின்னணியைப் பார்த்தால் சாதீயமாகவோ மதமாகவோதான் இருக்கிறது. ஏற்கெனவே ஒற்றுமையின்றி இருக்கும் தமிழினத்திற்கு இது மேலும் பெரும் பின்னடைவே.

பெரியார் தமிழை விமர்சனம் செய்ததெல்லாம் அக்கறையுடனான கோபம்தான். காட்டுமிராண்டி மொழி எனச்சொன்னதெல்லாம் புராணக்குப்பைகளையே இலக்கியமாய் கொண்டாடிக்கொண்டிருந்ததைக் குறிப்பிடத்தான். அவரளவுக்கு தமிழனுக்கு தன்மானத்தை தந்தவர் எவர்?

திராவிடம் என்பது ஆரியத்திற்கெதிரான ஒரு குறியீடுதான். உண்மையில் எல்லோருக்கும் மூத்தவர்களான நாம்தான் ஏனைய திராவிட இனத்தவர்களை இப்பெயரில் ஆளுமை செலுத்தியிருக்கவேண்டும். நாம் அதைத் தவற விட்டோம். மாறாக மாற்று மொழியினர் நம்மை ஆதிக்கம் செலுத்தியதையும் கவனிக்காமல் விட்டோம். திராவிடர்கள் என்றாலும் நாம் தமிழர்கள்தான்.

பெரியாரே சொல்லியிருக்கிறார், "எல்லோரும் ஒன்றாகயிருந்தபோது திராவிட நாடு கேட்டேன். இப்போது ஆளாளுக்கு பிரிந்துபோன பிறகு அது எதற்கு? தனித்தமிழ்நாடுதான் தேவை" என்றார்.

நான் முற்றிலுமாக தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறேன் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திராவிடத்திற்கும் பெரியாருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஆரிய புராணங்களை எல்லாம் ஆய்வு செய்து நமக்கெல்லாம் சிந்திக்கும் ஒளிகொடுத்த திராவிட இயக்க தியாகிகளை நாம் வெறுத்தல் நன்மைக்கன்று. இன்றைக்கு பெரியாரை குறைசொல்லும் எந்த (பொதுவுடைமை) அமைப்புகளும் இந்தளவுக்கு ஆரியருக்கு எதிராய் போரிடவில்லை. திராவிட இயக்க கலைஞர்களும் எழுத்தாளர்களும் இல்லாதுபோயிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் நாம் நம்மை உணராமல் புராணங்களிலேயே மூழ்கி இருந்திருப்போம். குறைசொல்வதைக் கைவிட்டு திராவிடத்தை தம் சுயலாபத்துக்காய் பயன்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டி நாம்தான் அரியணையை கைப்பற்றவேண்டும்.

சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து அவர்கள் போரிடுகிறார்கள். இங்கே ஆரிய குப்பைகளை எதிர்த்து இவர்கள் போரிட்டார்கள். நாளை ஈழம் அமைந்தாலும் அங்கே நம்மவர்கள் பெரியார் கருத்துக்களால் புதிய பார்வை பெறத்தானே செய்வார்கள். நாளைய தலைமுறைக்கும் சுயசிந்தனை பெரியாராலேயே எங்கிலும் தானாக வரும். ஆயுதம் இல்லையானாலும் அறிவு போராடிக்கொண்டுதானிருக்கும். 

திராவிடத்தை எதிர்ப்பவர்களின் முதல்குறி பெரியாராகத்தான் இருக்கிறது. சந்தடிசாக்கில் காவிப்பொறி உருண்டைகளும் இவர்களின் பின்னே அணி திரளுகிறார்கள்.

நாம் மோசமானதொரு காலகட்டத்தில் நிற்கிறோம். உண்மையான பெரியாரியவாதிகள் தமிழ் வெறியர்களாகத்தான் இருக்கிறார்கள். சாதிவெறியர்கள் வெளிப்படுத்தும் தமிழ்தேசியத்தையே அவர்கள் ஆபத்தானதாக பார்க்கிறார்கள்.

பெரியாரை விடுவித்த தமிழ்த்தேசியத்தால், அடுத்த பத்தாண்டுகளில் சாதிவாரியாக கூறுபட்டு நிற்கப்போகிறது தமிழகம். பலநூறு சாதித்தலைவர்கள் முளைக்கப்போகிறார்கள். அவ்வாறான தமிழ்த்தேசியத்தை நோக்கியே அரசியல்பாதைகள் வகுக்கப்படுகிறதாய் புலப்படுகிறது.

RSS-காரர்களின் வாதங்களும் திராவிடத்தை எதிர்ப்பதாய்ச்சொல்லும் தமிழ்த்தேசியவாதிகளின் வாதங்களும் ஏறக்குறைய நேர்கோட்டிலேயே இருக்கிறது. தமிழனுக்கு இது பெரும் ஆபத்தன்றி வேறென்னவாம்?

ஒட்டுமொத்தமாக குறை சொல்லாமல், போலியான திராவிடத்தை தெளிவாக வரையறுங்கள்.

நான் ஒரு பெரியாரியவாதி. தமிழன். நான் வீரமணியையோ திமுகவையோ ஆதரிக்கிறவனில்லை. தீவிர தமிழ் வெறியன்தான். ஆனால் பெரியாரையும் அவர் இயக்க கொள்கைகளையும் எதிர்ப்பதை சிறிதுகூட ஏற்றுக்கொள்ளாதவன். உண்மையான பெரியாரியவாதிகள் யாவரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

குறுகிய காலத்தில் நாம் தமிழர் அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் எத்தனைப்பேர் பாருங்கள். அதற்காக தீவிரமாய் இருந்த சிலர் இப்போது அதில் இல்லை. இதை தவறாகச் சொல்லவில்லை. மீண்டும் நான் சொல்கிறேன். தமிழ் வெறியும் தமிழ்த்தேசிய சக்திகளும் வளர்வதை ஆதரிக்கிறேன். ஆனால் பெரியாரையும் அவர் கொள்கைகளையும் விமர்சிக்குமளவுக்கு இங்கே யாரும் தியாக மனப்பான்மையோ அல்லது கருத்தியலையோ கொண்டவர்களாய் தெரியவில்லை.

வெளியேறிப் போனவர்களை வைத்து எப்படி நாம் தமிழர் அமைப்பை குறைசொல்ல முடியாதோ; அவ்வாறே திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் தம் சுயநலத்துக்காய் பயன்படுத்திக்கொண்டமைக்காக அதை நாம் எதிர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? நாம் பெரியாரைக் கைவிடல் நியாயமேயில்லை. பெரியாரின் துணைகொண்டே எதிர்கால சந்ததியை தமிழுணர்வோடு வழிநடத்த வேண்டும்.

சமீபத்தில் மறைந்த திருவாரூர் தங்கராசு அவர்களின் வரலாறைப் படித்தேன். அடக்க முடியாமல் கண்ணீர் வந்தது. புதர்கள் படர்ந்து வழியே இல்லாத ஊருக்கெல்லாம் நடந்து சென்றே புராண நாடகங்களை எதிர்த்து கூட்டம் போட்டிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். நாடகம் நடத்தியிருக்கிறார்கள். அவர் எழுதிய ஒரு புத்தகத்திற்கும் தற்போதுகூட எவராலும் மறுப்பு வெளியிடவே முடியாது. நம் மக்கள் அறிவுபெற எப்படியெல்லாமோ பாடுபட்டிருக்கிறார்கள்...

சீமான் போன்றதொரு கோபம்கொண்ட தமிழ் அரசியல்வாதி வளரவேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் திராவிட இயக்க கொள்கைகளை எதிர்க்காமல் அதை சுயலாபத்துக்காய் சீரழித்தவர்களை மட்டுமே வெளிப்படையாய் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்த வேண்டும். எல்லோரும் இந்த மக்களின் மாற்றத்துக்காகவே முயற்சிக்கிறோமெனில் இதுவே நல்ல பாதை.

நமது ஆற்றல்களை நமக்குள்ளே மோதி வீணடித்துக்கொள்வதில் பயனில்லை. நாம் ஆரியனையும் சிங்களனையும் ஹிந்தி வல்லாதிக்கத்தையும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment