16.7.21

திரைப்பட சங்கங்கள்

"ஷாட் ரெடி" என்று சொன்னதும் உடனே கிளம்பி படப்பிடிப்பு தளத்திற்கு வரும் தொழில் நேர்மை இல்லாமல் வாடிக்கையாக இருக்கும் பலரில் சிலர் சம்பளம் வேண்டாம் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எனினும் இதை வரவேற்றாக வேண்டியதுதான். நாலைந்து படங்களில் சிறிதாய் தலைகாட்டி பின்னர் பெயர் தெரியும்படி ஆகிவிட்டால் சிலருக்கு கொம்பு முளைத்துவிடுகிறது. தன்னால் ஒரு நிமிடமும் தாமதமாகிவிடக்கூடாது என்று நினைக்கும் தொழில் நேர்மை சிலரிடம் மட்டுமே இருக்கிறது. விகிதளவில் இது மிகவும் குறைவு. இயக்குநரையோ தயாரிப்பாளர்களையோ இவர்கள் மதிப்பது பிறகு இருக்கட்டும், முதலில் தொழிலை கொஞ்சமாவது மதிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த சிலர். பழம்பெரும் நடிகர்கள் எல்லோரிடமும் இந்த பண்பும் குணமும் திறமையும் அதிகம் இருந்தது என்று படிக்கும்போது அவர்களை இன்றும் மிகவும் மதிக்கத் தோன்றுகிறது. பிற மாநில திரைப்பட சங்கங்கள் கடுமையான விதிகளுடன் கட்டுக்கோப்பாய் இயங்குகிறது என்பதை கேள்விப்படுகையில் பொறாமையாகத்தான் இருக்கிறது. பொதுவாக சங்கப் பொறுப்புகளை ஏற்க வருபவர்களுக்கு தொலைநோக்குப் பார்வையும் சுயநலமற்ற சேவை மனப்பான்மையும் விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கும் போக்கும் இருந்தால்தான் அதுசார்ந்த துறை கட்டுக்கோப்பாய் விளங்கும். இங்கிருக்கும் சங்கங்களோ எதற்கு உருவானதோ அதைத்தவிர பிற வேலைகளை திறமையாகச் செய்துகொண்டிருக்கிறது. இதனால் தொழில் நேர்மை இல்லாதவர்களுக்கு எந்த சங்கத்தின் மீதும் எப்போதும் அச்சமில்லை. எந்த குறைகளையும் கட்டுப்படுத்தும் வலு எந்த சங்கத்திடமும் காணவில்லை.

09.05.2020



No comments:

Post a Comment