ஈழப்போரின்போது உருவான மன அழுத்தம் இன்னமும் நீடிக்கிறது. இவ்வாற்றாமையே பலவற்றின்மீதும் பெருங்கோபமாக மாறுகிறது. நூலறுந்து, மின்கம்பத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க நினைப்பவன் மனம்போல் தமிழர் அரசியல் நிலைகண்டு கவலையுறுகிறது. கேட்பாரில்லாதவர்கள் என்று கொல்லப்பட்ட அத்தனை பேரில் ஒருவருக்காகவாவது பழிவாங்கும் உணர்வை கடமையென விரும்பி சுமந்து மௌனித்திருக்கிறது. கேவலம், தன் ஜாதிவெறிக்காக மட்டும் பிறந்து உண்டு உயிர்வாழும் அற்பர்களுடனும்; அரை வெந்தோர்களின் அரசியல் புரிதல்களுடனும் மல்லுகட்டுவதிலுமே தமிழ் ஊட்டிய அறவுணர்வு கழிகிறது.
உலகில் யூத இனமும் தமிழ் இனமும் அதிகப்படியான துயரங்களைச் சந்தித்திருக்கிறது. தன் அனுபவத்திலிருந்து மீண்டு யூத இனம் தற்போது பாதுகாப்படைந்துவிட்டது. தமிழ் இனம் மட்டும் இன்னமும் ஜாதி; மதம்; கட்சி; அடிமைப்பதவி உணர்வுகளிலேயே தம் ஆற்றல் இழந்துகொண்டிருக்கிறது. பாவேந்தன் பாரதிதாசன் தமிழருக்காகக் கண்ட பெருங்கனவு பலிக்கும் அந்த ஒருநாள் வரலாற்றில் வரத்தான் போகிறது.
No comments:
Post a Comment