தங்களுக்குத் தெரியாமலே ஒரு கொலை முயற்சி வலையில் சிக்கவைக்கப்பட்டு, அக்கொலை நிகழும் முன்னர் பிடிபடும் நால்வரைப் பற்றி துப்பு துலக்குவதில் கதை துவங்குகிறது.
இந்தியாவில் காவல்துறை செயல்படும் விதம், இந்தியா முழுதும் ஜாதி வெறி நிகழ்த்தும் கொடூரம், நாடெங்கும் தலித்துகள் சந்திக்கும் அவலம், குற்றவாளிகளை உருவாக்கும் நாட்டின் சமூக சூழல், காவல் நிலையங்களில் நடக்கும் ஈகோ மோதல், ஊடகங்களின் கவன ஈர்ப்பு பொய்கள், உறவுகளுக்குள்ளான நிலத்தகராறு, பழி வாங்கல், காவல்துறை உயர் அதிகாரிகளின் மறைமுக அரசியல் சேவை, சமூகத்தின் மீதான இந்திய முஸ்லீம்களின் அச்சம், இந்துத்வ வெறி, வாழவழியற்ற சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவது, மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை அவலம், நாடும் மக்களும் தங்கள் சுகத்திற்காகவே என வாழும் அசலான அரசியல்வாதிகள், தொடர்ந்து கானலாகும் தலித் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு, எதற்கெடுத்தாலும் ISI & பாகிஸ்தான் எனக் கைகாட்டும் இந்திய அரசியல் முகம், வழக்குகளில் விசாரணைகளில் CBI செய்யும் பித்தலாட்டங்கள், சாகடிக்கப்படும் நீதி என சகலத்தையும் துகிலுரிக்கிறது இந்த இணைய தொடர். மொத்தம் 9 பகுதிகள். ஒரே இரவில் முழுதும் பார்த்தேன். இந்த நாட்டில் நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதாக கடைசியில் ஒரு ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஆனால் ஆழ்ந்து கவனித்தால் உண்மை இதுவாகத்தானே இருக்கிறது. ஜாதி, மத, அரசியல், பணம் என்று எந்தவொரு பின்புலமும் இல்லாத ஒரு எளிய மனிதனால் அச்சமில்லாமல் நிச்சயமாக நீதியைப் பெறும் நம்பிக்கையை விதைத்திருக்கிறதா இந்த அரச நிர்வாகம்?
ஜாதி மத சீழ்பிடித்த இந்திய அரசியலின்; காவல்துறையின்; நீதித்துறையின் அசலான நகல் இந்த Paatal Lok. அருமையான ஆக்கம். தயவுசெய்து அனைவரும் தவறாமல் பார்க்கவும்.
27.05.2020
No comments:
Post a Comment