16.7.21

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளைக் காணும்போதெல்லாம் ஒரு கணம் நின்று யோசிக்கிறேன். அதிலிருக்கும் வயது அல்லது பிறந்த தேதியை பார்க்கிறேன். இன்னும் வாழ்ந்திருக்கலாமே.., அதற்குள் என்ன பிரச்சினையோ? என்று இரக்கப்படுகிறேன். முன்பின் தெரியாத எவரது இறப்புச் செய்தியைப் பார்த்ததும் மனதில் அஞ்சலி செலுத்துகிறேன். முகநூலில் நண்பராக இருந்து இறந்துபோனவர்களின் பக்கங்களை அவ்வப்போது புரட்டிப் படித்துப் பார்க்கிறேன். எதை நோக்கினும் இயற்கை மீண்டும் மீண்டும் ஒன்றையே நினைவுபடுத்துவதாய் உணர்கிறேன். இந்த வாழ்வு என்பதை மிகையுணர்ச்சியாய் பரிமாற்றம் செய்து உணர்ந்துகொள்ளும் நோய் யாரால் எப்போது தொற்றியது என்றும் யோசிக்கிறேன். 80, 90 காலத்து மின்சாரம் இல்லாத இரவுகளில் வானத்தில் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களில் கடந்த காலங்களின் நிழற்படங்கள் பதிவாகியிருப்பதை உறக்கம் வரா இரவுகளில் உறுதி செய்துகொள்கிறேன். எல்லாக் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளிலும் இருக்கும் முகங்களில் தெரியும் நிறைவேறாத ஆசைகள் & கனவுகள் குறைந்தபட்சம் எனக்கான சுவரொட்டிகளில் இருந்துவிடக்கூடாது என்பதற்காய் வாழ்ந்துவிட வேண்டியிருப்பதை உணர்கிறேன். எந்த வருடமேனும் ஒருமுறை அப்பாவுக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டலாம் என்று வைத்திருக்கும் அவரது நிழற்படத்தைப் பார்க்கையில் அவரைவிடவும் என்னைக் குறித்து அதிகம் கவலைப்பட்ட ரேகைகள் பதிவாகியிருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். தற்காலிகமாக அவ்வெண்ணத்தைக் கைவிடுகிறேன். அப்பாவின் முகத்தில் தெரியும் கவலை ரேகைகளை அழிப்பது குறித்து சிந்திக்கிறேன். தாயாகி, தந்தையாகி இறந்துபோன எல்லா சுவரொட்டி முகங்களிலும் இதே ரேகைகள் படர்ந்திருப்பதையும் இப்போதுதான் கூடுதலாய் கவனிக்கிறேன்.

23.05.2020

No comments:

Post a Comment