1.7.21

"மாவோயிஸ்ட்" - பா.ராகவன்



மெத்தப் படித்தவர்களும் ஓரளவு அறிவு இருப்பவர்களும்கூட சில விஷயங்களில் சராசரியாகவே இருக்கிறார்கள். அரசும் காவல்துறையும் அதன் அடிவருடிகள் நடத்தும் நாளிதழ்களும் சொல்வதெல்லாம் உண்மை என்றே நம்பிவிடுகின்றனர். தேசபக்தி என்றால் வெறும் உணர்ச்சிவயப் படுவதும் கோஷங்கள் போடுவதும் மட்டுமே என்ற மனநிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர். இவர்கள்தான் மோசமான ஆட்சியாளர்களின் பலம். இப்படியானவர்கள் நம்பும் ஒரு முக்கியமான தகவல் "மாவோயிஸ்டுகள்" என்றால் தீவிரவாதிகள். இதுவரையில் மாவோயிஸ்டுகள் எந்தவொரு தனியார் முதலாளிகளுக்காகவோ தனிநபர் தலைவருக்காகவோ போராடியதில்லை. அவர்களின் ஒவ்வொரு நகர்வும் மக்களுக்காவே நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு தாக்குதலில் மக்கள் பாதிக்கப்பட்டால் உடனே சுயவிமர்சனம் ஏற்று வருத்தம் தெரிவித்துவிடுகிறார்கள். மீண்டும் அவ்வாறு நடவாமல் கவனமாக கையாளுகிறார்கள். ஆனால் அரசோ முறைப்படி உத்தரவு இல்லாமலும்கூட தனியார் முதலாளிகளுக்காக தூத்துக்குடியில் போராடிய பொதுமக்களை சுட்டுக்கொன்றது. டெல்லியில் போலிஸ் முன்பாகவே போராடும் மாணவர்களை ஒரு ஹிந்து வெறியன் சுடும்போது வேடிக்கை பார்க்கிறது. புகார் கொடுக்கும் பெண்கள் & பாதுகாப்பு கோரும் மக்கள் மீது மக்களுக்காக சேவை ஆற்றுவதாகச் சொல்லும் காவல்துறையும் அரசியல்வாதிகளுமே கூட்டு வேட்டை நடத்துகிறார்கள். கிரிமினல்களின் கையே எங்கும் எதிலும் ஓங்கியுள்ளது. இதற்கு மாறாக மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டு பகுதியிலோ அநீதிகளுக்கு எதிராக உடனடித் தீர்ப்பு மக்கள் நீதிமன்றங்களால் வழங்கப்படுக்கிறது. நிலங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ஊழல் இல்லை. சுரண்டல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி தாங்களாவே தங்கள் பகுதி தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். தேர்தலில் நின்று பதவிக்கு வரும் தகுதியற்ற நாய்களையெல்லாம் இங்குபோல் அங்கு யாரும் கொண்டாடுவதில்லை. ஒரு நாடும் மக்களும் எப்படி இருக்க வேண்டுமோ அந்த வாழ்க்கையை, அந்த சமூகத்தை அவர்கள் கற்றுத்தருகிறார்கள்; கட்டி எழுப்புகிறார்கள். ஊழல்வாதிகளுக்கு சொம்பு அடிக்கும் ஊடகங்களும், யாருக்கும் பயனற்ற அரசியல் அறிவு கொண்டவர்களும்தான் ஒன்றுமே தெரியாமல் ; தெரிந்துகொள்ளாமல் 'மாவோயிஸ்டுகள் என்றாலே தீவிரவாதிகள்' என்று தொடர்ந்து ஒப்புவிக்கின்றனர். இப்படியானவர்கள் மாவோயிஸ்டுகளை பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஒரு எளிமையான புத்தகம் இந்த புத்தகம். கிழக்கு பதிப்பகம் சார்பில் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. "என்று சொல்லப்படுகிறது" என்ற வார்த்தைகளின் பின்னால் பதுங்கிக் கொண்டு சில மட்டும் பொதுப்புத்தி பார்வையில் பக்கச் சார்பாகவே எழுதியிருக்கிறார் ஆசிரியர். இருப்பினும் மாவோயிஸ்டுகளை பற்றி தெரிந்துகொள்ள ஓரளவு உதவக்கூடிய புத்தகம் தான் இது. தேடல் ஆர்வம் உள்ளவர்கள் ஒருமுறை வாங்கிப் படிக்கவும்; பின்னர் மாவோயிஸ்டுகளைப் பற்றி விமர்சனம் செய்யவும்.

01.02.2020

No comments:

Post a Comment