1.7.21

ஜெயலலிதா இறந்தநாள்

 


டிச 05. ஜெ. இறந்தநாளாக அறிவிக்கப்பட்ட நாள். உண்மையில் ஜெ.வின் இறந்த நாள் எதுவென்பது அந்த சிலருக்கு மட்டுமே வெளிச்சம். ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று எம் ஜி ஆர் நினைவிடத்தில் தியானம் அமர்ந்தார் ஒரு மாமனிதர். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு ஜெ. மரணத்தில் உள்ள மர்மத்தை ஆராய ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் அமைக்க வேண்டும் என்று யார் கோரிக்கை வைத்தாரோ அவரையும் அந்த ஆணையம் விசாரணைக்கு அழைத்தது. அவர் ஏனோ செல்லவில்லை. அவருக்கு நோக்கம் உண்மையைக் கண்டறிவதில்லை, அது அவருக்கு தெரிந்ததுதானே. அதில் வேறு யாரையோ சிக்கவைக்க மட்டுமே காய் நகர்த்தப்பட்டது. அதிகாரத்தாலும் பதவியாலும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த திரைத்துறையின் ஒரு தேர்ந்த நடிகைக்கு தன்னைச் சுற்றி பலர் "தெய்வமே" என்று நடித்துக் கொண்டிருந்தது மட்டும் கடைசிவரையில் தெரியாமலே போனது. தன்னை யாராலும் அசைக்க முடியாது என்றிருந்த அம்மையாரின் மரணத்தின் பின்னணி என்னவென போராடவோ முக்கியத்துவம் தரவோ ஒரு உண்மையான தொண்டனுமில்லை என்பது பெரும் சோகம்தான். ஒருவேளை உண்மை கண்டறியப்பட்டாலும் யாரும் எதற்கும் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் அவர்கள் கையிலேயே அதிகாரம் இருக்கக்கூடும் என்பதால். ஜெ. நினைவிடம் என்பது வெறுமனே அவர் நினைவிடம் மட்டுமல்ல, பல உண்மைகளுக்குமான நினைவிடமும்தான்.
பணமும் பதவியும் அதிகாரமும் வலுவும் நீதிதேவதையின் கற்பை சூறையாட முடியாத வலுவான நிர்வாகத்தையும் விழிப்புணர்வான தொண்டர்களையும் மக்களையும் உருவாக்க அவர் சற்றாவது தன் பலத்தை பயன்படுத்தியிருக்கலாம். காலம் அதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கியிருந்தது.
இந்த மண்ணில் வாழ்ந்து முடித்துவிட்டுப்போன ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நீதியை தெரிவித்துவிட்டுச் செல்கிறார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களை நாம் உண்மையாக நேசிக்க வேண்டும் அல்லது உண்மையாக வெறுக்க வேண்டும். உண்மையாக ஆதரிக்க வேண்டும் அல்லது உண்மையாக எதிர்க்க வேண்டும். போலித்தனம் போலிகளையே பதிலாய் தரும்.
ஜெ. செய்த சில நல்லவைகளுக்காக நினைவஞ்சலி...!

05.12.2019


No comments:

Post a Comment