"எனக்கு நம்பிக்கை வைப்பதின்மேல் நம்பிக்கை இல்லை .
முதலில் நீங்கள் இதைப் புரிந்து கொள்ளுங்கள் .
நீங்கள் சூரியனை நம்புகின்றீர்களா?
நீங்கள் சந்திரனை நம்புகின்றீர்களா ?
என யாரும் என்னிடம் இதுவரை கேட்டதில்லை .
இதுவரை நான் 30 ஆண்டு காலம் தொடர்ச்சியாக பல்லாயிரம் மக்களின் பல்லாயிரம் கேள்விகளுக்குப் பதில் கூறியிருக்கிறேன் .
ரோஜா மலரில் நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களா ? என்று ஒருவரும் கேட்கவில்லை .
அது ஒரு தேவையில்லாத கேள்வி .
நீங்கள் அது நேரில் இருந்தால் அதைப் பார்க்கலாம் . இல்லாவிடில் அதைப் பார்க்க இயலாது .
கற்பனைகளை மட்டுமே நம்ப வேண்டி இருக்கும் .
உண்மைகளை நம்பத் தேவை இல்லை .
கடவுள் மனிதன் படைத்த மாபெரும் கற்பனை .
ஆகவே , அதை நம்ப வேண்டியுள்ளது .
கடவுள் என்னும் கற்பனையை ஏற்படுத்திக்கொள்ள என்ன அவசியமிருக்கிறது ?
இவ்வாறு கடவுள் என்னும் கற்பனை உருவைப் படைத்துக் கொண்டதற்கு மனிதனிடம் ஏதோ ஒரு உள்ளார்ந்த தேவை இருந்திருக்க வேண்டும் .
அந்தத் தேவை கருதியே அது நிகழ்ந்திருக்கக் கூடும் .
என்னைப் பொருத்தவரை அப்படி ஒரு தேவை எழவில்லை .
ஆகவே , இந்தச் சிக்கல் எனக்கு ஏற்படவில்லை .
ஆனால் ஏன் கடவுளின் மீது மக்கள் அபரிமித நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நான் விளக்கிக்கூற வேண்டியுள்ளது .
மனித மனத்தின் தன்மை குறித்து இங்கு புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்
மனித மனம் வாழ்க்கையில் ஏதோ அர்த்தமிருப்பதாக அதைத் தேடி அலைகிறது .
வாழ்வில் குறிப்பிடும் படியாக ஏதும் அர்த்தமில்லை எனில் நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ?
ஏன் தேவையில்லாமல் சுவாசித்துக் கொண்டுள்ளீர்கள் ?
நாளை காலை மீண்டும் எழுந்து முன்பு செய்தவைகளையே திரும்பத் திரும்ப செய்துவருகின்றோமே , அது ஏன் ?
அதே தேநீர் , அதே சிற்றுண்டி , அதே மனைவி , அதே குழந்தைகள் , மனைவிக்கு போலியான முத்தம் , நேற்றுச் சென்ற அதே அலுவலகம் , அதே வேலை , பின் திரும்பிவந்து மீண்டும் ' ' போரான ' ' அலுப்புத்தட்டிய வாழ்க்கைத் தொடர் ? இது என்ன ?
இவற்றுக்கு எல்லாம் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா ?
இல்லை நாம் சும்மா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா ?
ஆகவே மனிதன் வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.
கடவுள் என்னும் கற்பனை வடிவம் அவனுடைய தேடுதலுக்குரிய அர்த்தத்தை ஓரளவுக்கு நிறைவு செய்கிறது .
கடவுள் இல்லை எனில் உலகம் ஒரு தற்செயல் நிகழ்வாகவே , வெறுமையாகவே கருதப்படும் .
உங்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற மாதிரியான ஒரு உலகத்தைக் கடவுள் அன்றி வேறு யார் படைத்திருக்கக் கூடும் ?
கடவுள் இல்லாத உலகம் ஒரு தற்செயல் நிகழ்வு . அர்த்தமில்லாதது .
வாழ்வின் அர்த்தமில்லாத தன்மையை மனித மனம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவ நிலையில் இல்லை .
வாழ்வை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையும் முதிர்வும் மனித மனத்திற்கு இயற்கையாகவே அமைந்திருக்கவில்லை .
கடவுள் , சொர்க்கம் , நரகம் , நிர்வாணம் , மோட்சம் , மரணத்திற்குப்பின் வாழ்வு என்னும் கற்பனைகள் மனித மனதின் தேடுதலுக்கான தீனியாகவே அமைகிறது .
மனிதனின் உள்ளார்ந்த தேவையை நிறைவு செய்யவே இந்த கற்பனை உலகம் உள்ளது .
கடவுள் உண்டு என்றோ அல்லது கடவுள் இல்லை என்றோ , என்னால் கூற இயலாது.
என்னைப் பொறுத்தவரை இது பொருத்தமில்லாத கேள்வி. இது கற்பனை உலகு பற்றிய கேள்வி. எனது வேலை முற்றிலும் வேறானது"
- "உணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு"
29.12.2019
No comments:
Post a Comment