1.7.21

ஜோதிடம்

 

மதங்களின் பெயரால் பூமியில் மனிதர்களிடையே பரப்பப்பட்ட எல்லா கற்பனை புரட்டுகளும் மனிதன் இயற்கையோடு கலந்து வாழ்வதற்கு தடையாக இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றின கனவுகளும்; நிகழ்காலத்தின் ஏமாற்றங்களும்; மொத்த வாழ்வைப் பற்றிய பயமும்; இயற்கை பற்றிய இன்னும் புரியாத பலவும் ஒரு மனிதனை பக்தியிடம் சரணடைய வைக்கிறது. அதில் ஒரு தற்காலிக நிம்மதியை உணரவைக்கிறது. உண்மையில் இயற்கைக்கும் கடவுள் என்று மனிதன் கொண்டிருக்கும் அளவுகோலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறே கடவுளுக்கும் மதங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீர் 100 பாகை கொதிநிலையில் ஆவியாகும் என்பதைப்போல; காந்தமும் இரும்பும் ஒன்றையொன்று கவரும் என்பதுபோல; ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் நீராகும் என்பதுபோல இயற்கையில் சில விதிகள் இருக்கிறது. இந்த விதிகள் (rules) என்பது மனித அறிவுக்கு சிலது புரிந்தும் இன்னும் ஏராளம் புரியாமலும் இருக்கிறது. இந்த புரியாத தகவல்கள் இயற்கை மீது ஒரு பெரிய பிரமிப்பை உண்டாக்குகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து சென்ற மனிதனைக் காட்டிலும் இன்று வாழும் ஒரு சராசரி மனிதனின் அறிவு பெரியதுதான். ஆனால் அன்றைக்கு யாரோ சிலர் மிகவும் கூர்மையாக இயற்கையை கவனித்து சில மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை போல இயற்கையின் நகர்வுகளைக் கொண்டு சில கணக்கீடுகளை வகுத்தனர். அது 100% உண்மையானது என்பதும் சொல்ல இயலாது, 100% தவறானது என்றும் சொல்ல இயலாது. அவரவர் பகுத்தறிவு கொண்டு அதை ஆயும் போது சில உண்மைகள் விளங்கலாம். அதில் ஒன்று சோதிடம். இதற்கும் கடவுளுக்கும் மதத்திற்கும் தொடர்பே கிடையாது. மனிதனுக்கு இயற்கையின் நகர்வுகளால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதற்கான மருத்துவ முறைகள் குறித்தும் தங்களுக்கு தெரிந்த அளவில் சிலர் சில குறிப்புகளை விட்டுச் சென்றனர். அதில் தமிழ் மொழியில் வாழ்ந்த சித்தர்கள் முக்கியமானவர்கள் அவர்களின் குறிப்புகள் இன்றும் காணக் கிடைக்கிறது இலக்கணப்படி யிலான அவர்களது செய்யுள்களும் அதில் பொதிந்துள்ள கருத்துகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆனால் இவை இன்று மிகப்பெரும் வணிகம் ஆகிவிட்டது. அதிலும் மக்கள் விமர்சிக்க பயப்படும் அடையாளங்களை எல்லாம் இதனுடன் கலந்து எதிர்ப்பே இல்லாத பெரு வணிகமாக இன்று எல்லா இடங்களிலும் சத்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடவுளையோ வேறு எதையும் விமர்சித்தால் நமக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தால் பெரும்பாலனோர் இதிலெல்லாம் முறைகேடுகள் ஏமாற்றுகள் நடக்கிறது என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் போகின்றனர். தங்கள் பிரச்சனைகளுக்கு எங்கேனும் தீர்வு கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் கேள்விப்படுபவைகளில் எல்லாம் ஒரு மனிதன் கவனம் வைக்க ஆரம்பிக்கிறான். அதில் சோதிடம் முதன்மை வகிக்கிறது.

30.12.2019

No comments:

Post a Comment