குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பொய்யை பலர் பரப்புகிறார்கள். அச்சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளிலிருந்து இங்கு தஞ்சம் புகுந்த மத சிறுபான்மையினருக்கு மட்டுமே இச்சட்டம் என்று. இந்தவகையில் இதில் தவறில்லை. மதத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் நாடுகளில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால் ஆதரவு கொடுப்பது குற்றமில்லை. இங்கு பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்காக முற்போக்கு சக்திகள் குரல் கொடுப்பதும் இதற்குத்தானே. ஆனால் இதில் இலங்கை ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை? இலங்கையில் மதத்தின் பேரால் இனத்தின் பேரால் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்களுக்கு மட்டும் ஏன் இந்தியா ஆதரவு காட்ட முன்வரவில்லை? இலங்கை அவர்களின் நட்பு நாடு என்றும் அவர்கள் இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய முஸ்லிம் நாடுகள் நட்பு இல்லை என்றும் அவர்கள் மறைமுகமாக தெரிவிக்கிறார்கள். இச்சட்டத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து முஸ்லிம் அகதிகள் இங்கு வந்து விடக்கூடாது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இத்திருத்தம் செய்துள்ளார்கள் என்பது புரிகிறது. ஆனால் முஸ்லிம்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியா வருவதற்கான காரணங்கள் என்ன இருக்கிறது? எதுவும் இல்லை என்பதால் இச்சட்டத்தால் எந்த முஸ்லிம்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. வழக்கம்போல இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் தமிழகத்தில் வாக்குரிமை இல்லாத காரணத்தினால் அவர்கள் கைவிடப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு குரல் கொடுப்பதைக் காட்டிலும் தமிழக கட்சிகள் வாக்குகளை கருத்தில் கொண்டு எப்போதும் சிறுபான்மையினர்களையே முன்னிலைப்படுத்தி போராடுவதாகக் காட்டிக் கொள்கிறது. அகதிகளை ஏற்றுக்கொள்வதில் மதத்தை அளவீடாக வைப்பது நியாயமற்றது என்றாலும், முஸ்லிம் நாடுகளில் வாழும் பிற மத சிறுபான்மையினர் என்பதற்காக பாதிப்படைந்தவர்களுக்கு தஞ்சம் கொடுக்கிறோம் என்று அறிவித்திருப்பது நியாயம்தான். இதில் என்ன தவறு இருக்கிறது? மேற்குறிப்பிட்ட நாடுகள் எல்லா மதத்தினரையும் சமமாக நடத்துவோம் என்று அறிவித்தாலும் முடிவெடுத்தாலும் இந்த பிரச்சனை முடிந்து போகிறது. இதற்கு இங்கிருக்கும் முற்போக்கு சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். ஒரு நாடு உள்நாட்டிலும் பெரும் மக்கள் தொகையிலும் பாதிக்கப்படும்போது அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் வைப்பது தவறொன்றுமில்லை.
No comments:
Post a Comment