எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின் (சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை.
செலம்பரத்தின் அப்பா ஜின்னிங் ஃபாக்டரியில் வேலை செய்கிறார். ஃபாக்டரி முதலாளியின் நண்பர் வடகூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் தன்னுடைய சந்ததிகளுக்கு வளைத்துப் போட பார்க்கிறார். அப்படியே செலம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் வளைத்துப் போட பார்க்கிறார். அங்குதான் வருகிறது வினையே!. நிலவிவகாரத்தால் உட்புகைச்சல் ஏற்பட்டு ஆடு மேய்க்கும் செலம்பரத்தின் அண்ணன் வடக்கூரானால் கொலையாகிறான்.
அண்ணன் கொலைக்கு பழிவாங்க இருள் கவிழ்ந்த மாலை நேரத்தில் செலம்பரம் வடக்கூரானை வெட்டி வீழ்த்துகிறான். தன்னைப் பிடிக்க வருபவர்கள் மீது கையெறிகுண்டை வீசி தப்பிக்கிறான். இதனை அவனுடைய அப்பாவும், மாமாவும் தெரிந்து அதிர்ச்சிகொள்கிறார்கள். அவன் அப்பாவும் வடக்கூரானை சாய்க்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தவர்தான். அதற்குள் செலம்பரம் முந்திக்கொண்டான்.
அப்பாவும் மாமாவும் விரைவாக செயல்பட்டு செலம்பரத்தின் அம்மா, தங்கை இருவரையும் அவனுடைய சித்தியின் ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆசையாக வளர்த்த நாயையும், ஆடுகளையும் அத்தையின் பராமரிப்பில் விட்டுவிட்டு தலைமறைவாக வாழப் புறப்படுகிறான்.
கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. "அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு" என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. மறைந்து வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய செல்வதுடன் நாவல் முடிகிறது.
160 பக்க சிறிய நாவலுக்குள் காவல்துறை & நீதித்துறையின் அவலம், சுரண்டல் முறை, கிராமத்து மக்களின் பாசம், உணர்வுப் பூர்வமான வாழ்க்கை முறை, பகை, பழிவாங்கும் காரணம் என எல்லாவற்றையும் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் பூமணி.
No comments:
Post a Comment