29.6.21

சோதிடத்தின் எல்லை

பொன்னேர் பூட்டுவது, நெல் விதைப்பது, கடலை விதைப்பது, திருமணம் நடத்துவது, மஞ்சள் நீராட்டு நடத்துவது, நிச்சயதார்த்தம் நடத்துவது, புதுமனை புகுவது என்று ஊரில் என் உறவினர்க்கெல்லாம் என் தந்தையார் இருந்தவரை அவர் குறித்து தரும் நாட்களில்தான் அலுவல்கள் நடக்கும். எதற்கும் பணம் வாங்கமாட்டார். அவர் படிக்காதவர். மாடு மேய்ப்பதும், மழைப் பருவத்தில் விவசாயம் செய்வதும், உறவுகளுக்குள் பஞ்சாயத்து செய்வதுமாக வாழ்வைக் கழித்தவர். இந்தக் கார்த்திகை மாதம் நான் பிழைப்பது கடினம் என்று அவர் 2000 ம் ஆண்டு சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அவர் இறந்த அந்த வருடமே அதுவரை அவர் சேர்த்து வைத்திருந்த சுமார் 30 வருட பழைய பஞ்சாங்க புத்தகங்களை வேறு ஒருவருக்கு எடுத்துக் கொடுத்துவிட்டேன். இரண்டுமுறை தெருக்கூத்தில் தருமர் வேடமிட்டு ஆடியிருக்கிறார். அதில் நாடகப் பாட்டு நோட்டுகளும் ஏராளம் இருந்தது. பஜனைகளில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பல பாடல்களை முழுமையாகப் பாடுவார். தீவிர தி.மு.க ஆதரவாளர்.
வெறுமனே பொருள்தேடி மட்டும் வாழ்ந்துவிட்டுப் போவதோடு அல்லாமல் பல திறமைகளோடு இப்படி எங்கள் ஊரிலுள்ள இரு சமூகத்திலும் கடந்த தலைமுறையில் பலர் இருந்துள்ளனர்.
நிற்க, தற்போது திருமணத்திற்கு மணப்பெண் தேடுவது தொடர்பாக நேற்று ஒரு தரகரை சந்தித்தேன். அவர் சோதிடமும் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொன்னார். அதோடு பரிகாரம் செய்யவேண்டும் என்றும் ஏதோ சொன்னார்.
எனக்கு ஒரளவு தெரிந்த சோதிடத்தைப் பற்றி அவருடன் சிறிது நேரம் பகிர்ந்தேன். பின்னர் அவர் பரிகாரத்தைப் பற்றி பேசவில்லை; அமைதியாகிவிட்டார்.
மக்கள் பயப்படவோ, எவரையும் பயமுறுத்தவோ சோதிடத்தில் ஒன்றுமில்லை.
100% தான் சொல்வது நடக்கும் என்று தன்னிடமுள்ள சொத்துக்களை முழுதும் பணயம் வைத்து சவால் விடும் சோதிடர் எவரேனும் உண்டோ? அல்லது சொல்வது பலிக்கவில்லை என்றால் சிறை தண்டனை என்றால் இதைத் தொழிலாக எத்தனைப் பேர் பார்ப்பார்கள்?
சித்தர்கள் இதைப் பயன்படுத்திய நோக்கமே வேறு.

"நடக்க வாய்ப்புள்ளது" என்பதே சோதிடத்தின் எல்லை.
29.08.2019

No comments:

Post a Comment