கலைஞர் மனைவியே கோயிலுக்கு வந்துவிட்டார் பாருங்கள் என்று WhatsApp -ல் சிரிக்கிறார் ஒருவர். ஒரு நாத்திகவாதியின் மனைவி நாத்திகவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பது அறிவு வழிந்து ஆறாய் பெருகி ஓடும் முக்தி நிலையாக இருக்கலாம்.
இப்படிக் கிண்டலடிப்பவர்களுக்கு பாம்பு கடித்தாலோ விபத்து நேர்ந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ அவர்கள் உடனடியாகக் கோயில்களுக்குச் செல்வதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
எல்லாரிடமும் நாத்திகமும் ஆத்திகமும் ஏதோவொரு அளவு கலந்துள்ளது. அதை பிறரை பயமுறுத்தவும் ஏமாற்றவும் சுரண்டவும் அடக்கவும் பயன்படுத்துகிறோமா அல்லது விழிப்புணர்வுக்கு பயன்படுத்துகிறோமா என்பதில்தான் அதன் மேன்மை அடங்கியிருக்கிறது.
சுகவாழ்க்கை பற்றிய கனவுகள், வெற்றி தோல்வி பற்றிய பயங்கள், வறுமை, பணக் கஷ்டங்கள், மனக்கவலைகள், நோய்கள், பாசம், ஏமாற்றம், விரக்தி, etc... இவைகள்தான் கடவுளின் தூதர்கள்.
நேர்மையாக வாழ்கிறோம் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருந்தால் கடவுள் ஏன் தேவைப்படுகிறார்?
நேர்மையான கடவுளுக்கு கஷ்டங்களால் மனிதர்களை பயமுறுத்த வேண்டிய தேவை என்ன?
அடைந்தே ஆகவேண்டிய ஆசையும் பயமும் இல்லாதவனுக்கு எதன் துணையும் தேவையில்லை. கடவுளை கும்பிடுவது வெறும் நாத்திகம் ஆத்திகத்தில் மட்டும் அடங்கவில்லை. எல்லோரிடமும் நாத்திகமும் ஆத்திகமும் கலந்தே இருக்கிறது. ஆசையும் அச்ச உணர்வுமே அவரவர்க்குள் இருக்கும் பகுத்தறிவை கூட்டிக் குறைக்கிறது.
யாரெல்லாம் மரணத்தை நெருங்கிய தங்கள் தாய் தந்தையர்களின் அவசர மருத்துவ சிகிச்சையை உதறிவிட்டு, அவர்களைக் கோயிலுக்கு கூட்டிச் சென்று உருகி வேண்டி காப்பாற்ற நினைக்கிறார்களோ அவர்களுக்கு நாத்திகத்தை நக்கலாக விமர்சிக்க முழு தகுதியும் உள்ளது.
முழு நாத்திகவாதிகளும் முழு ஆத்திகவாதிகளும் அரிது. ராஜாத்தியம்மாளும் நம்மைப் போன்ற ஒருவர்தான்.
பெரியாரின் கருத்துக்களை ஏன்? எதற்கு? என்று பகுத்தறியாமல் இதைக்கொண்டு கிண்டலடித்து தங்களை சமன்படுத்திக் கொள்வது ஆகப்பெரிய ஞானநிலை.
No comments:
Post a Comment