17.6.21

ஏன் “மெரினா புரட்சி" திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்?

(இன்று "மெரினா புரட்சி" பார்த்தேன். இப்படத்தைப்பற்றிய எனது பதிவு இது. தயவுகூர்ந்து அனைவரும் பொறுமையாக அவசியம் படிக்கவும்)

*
“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது நம் கடமை” என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றியலாளர் எரிக் ஹோப்ஸ்வாம்.
வரலாற்றை நாம் முழுமையாக அறிந்துவைத்து இருப்பதில்லை. நாம் அறிந்துகொள்ள நினைத்தாலும் அவை நம்மிடம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பல நேரங்களில் நாம் வரலாறு மீதும், அதுகுறித்த ஆவணங்கள் மீதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் விளைவு அதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவதே இல்லை. வெறும் மேலோட்டமான தகவல்களைக் கேட்டு மட்டும் கடந்துவிடுகிறோம். அப்படி நாம் அக்கறை செலுத்தாத பல கொடூர வரலாறுகள் தமிழினத்திற்கு உள்ளது. இவைகளை தமிழின் அடுத்தடுத்த தலைமுறைக்கு யாரும் கொண்டு செல்ல முயற்சிக்காமல் போனதாலேயே மொத்த தமிழ்ச் சமூகத்திலும் ஒரு மந்தப்போக்கு தொடர்கிறது.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தாய்லாந்து, பர்மா வழியாக இந்தியா வந்து, இந்தியாவைக் கைப்பற்றி ஆசியா முழுக்க தன் கட்டுப்பாட்டை நிறுவ திட்டம் தீட்டியது ஜப்பான். இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் ஜப்பான் 1942-ம் ஆண்டு ‘சயாம்’ என்று அழைக்கப்பட்ட அன்றைய தாய்லாந்துக்கும், பர்மாவுக்கும் இடையே 415 கிலோ மீட்டர் அளவில் ஒரு மாபெரும் ரயில் பாதை ஒன்றைக் கட்டமைக்க முடிவு செய்தது. இதற்கு முன்னர் இதே பாதையில் ரயில் பாதை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டிருந்தது. ஆனால் குன்றுகள், ஆறுகள், காடுகள் என வெவ்வேறு நிலப்பரப்பினால் ஆன அந்த 415 கி.மீ பாதையை குடைந்து ரயில் பாதை அமைக்க மிகுந்த பொருட்செலவும், மனிதவளமும் தேவைப்பட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
தொழில்நுட்பம் வளர்ந்திராத அந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய பணி. பிரிட்டன் கைவிட்ட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முழுவீச்சுடன் களமிறங்கியது ஜப்பான். தன்னிடம் இருந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போர்க்கைதிகள், பொறியாளர்களுடன் மொத்தம் 60 ஆயிரம் பேருடன் தொடங்கியது இந்தப் பணி. அவ்வளவு பேர் போதாது என்பதை உணர்ந்த ஜப்பான், மலேசிய ரப்பர் மற்றும் தேயிலைக் காடுகளில் பணிபுரிந்து வந்த தமிழர்களை வலுக்கட்டாயமாக இதில் ஈடுபடுத்தியது. எங்கு செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம் எனத் தெரியாமல் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். தெருவில் நடந்து கொண்டிருந்தவர்கள் கடத்திச் செல்லப்பட்டு, அடிமைகளாக இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ரப்பர் தோட்டத்தில் ஏராளமான சோதனைகள், நெருக்கடிகளைச் சந்தித்த தமிழர்களுக்குக் குடும்பத்தோடு இருப்பது ஒன்றே நிம்மதியளித்திருந்தது. ஆனால், ரயில் பாதை பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டபோது, அதுவும் இல்லாமல்போனது. வானத்தில் சூரியன் இல்லாத நேரம் தவிர மற்ற எல்லா நேரமும், மக்களின் வேர்வையும் ரத்தமும் உழைப்பாக உரியப்பட்டது. பணியின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்களின் தலைகள் மற்ற தொழிலாளர்களின் முன்பு கொய்யப்பட்டு அந்தத் தலைகள், மரக்கிளையில் தொங்கவிடப்பட்டன.
காலரா, மலேரியா நோய்களால் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்தவர்கள், ஆங்காங்கே குழிதோண்டிப் புதைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில், இனி புதைக்க இடமே இல்லை என்றபோது, பிணங்கள் எல்லாம் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டன. 5 ஆண்டுகாலத்தில் இந்தத் திட்டத்தை முடிக்கத் திட்டமிட்டிருந்தது பிரிட்டன். ஆனால், இ்தைத்தான் ஜப்பானியர்கள் 15 மாதங்களில் நிகழ்த்திக்காட்டினர். அதற்காக ஒரு லட்ச ஆசிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதில், மிகப்பெரும்பான்மையானோர் தமிழர்கள். இத்தனைக்கும் பிறகுதான் 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரயில் சேவை தொடங்கியது. ஜப்பானியர்கள் இதை ஒரு திருவிழாவைப்போலக் கொண்டாடினர். உயிரிழந்தவர்கள்போக, எஞ்சி இருந்த தமிழர்களும் இதர தொழிலாளிகளும் சோர்வோடு மலேசியத் தோட்டங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். வேலை பார்த்ததற்கு ஊதியமாய் ஒவ்வொருவருக்கும் ஒரு மூட்டை நிறைய வாழைத்தார் படம் போட்டு அச்சடிக்கப்பட்ட பண நோட்டுகள் வழங்கப்பட்டன. அதுவே, அவர்களுக்கு ஆறுதலாக இருந்தபோதும் அப்போது, ‘அந்தப் பண நோட்டுகள் செல்லாது’ என அறிவிக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
உலகப் போர் முடிந்ததும் யுத்தக் கைதிகளாய் இருந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க வீரர்கள் அவர்களின் நாடுகளில் கதாநாயகர்களாய் கொண்டாடப்பட்டனர். பர்மா மற்றும் சீன தொழிலாளர்கள் அவர்கள் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து அடிப்படை வாழ்வாதாரத்துக்கான உதவியினைப் பெற்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அந்த மக்களுக்கு அந்த நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. ஆனால், இந்தக் கொடூரத்தில் கொல்லப்பட்ட சுமார் 80 ஆயிரம் தமிழர்களைப் பற்றிப் பேச அப்போது யாருமே இல்லை. பொருளாதாரத் தேவைக்காகப் புலம்பெயர்ந்ததால், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்கூட அந்த மக்களை யாரும் நினைவுகூரவில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பின் ஜெர்மனியும் ஜப்பானும் தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நாட்டை சார்ந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கியது. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டில் 25கோடி வெள்ளியை மலேசியா அரசாங்கத்துக்கு ஜப்பான் வழங்கியதாகக் கூறுகின்றனர்.
ஆனால் அந்த தொகை மரண இரயில் பாதை திட்டத்தில் பணியாற்றுபவர்களின் குடும்பங்களுக்குப் போய்ச் சேரவில்லை. அந்தத் தொகையை மலேசிய அரசு இராணுவத் தளவாடங்கள் வாங்க செலவிட்டு விட்டதாக இத்திட்டத்தில் பணியாற்றி இன்னும் உயிரோடிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இப்பணியில் இறந்த பிரிட்டிஷ் – டச்சு - அமெரிக்காவைச் சேர்ந்த 16,000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் கொடுந்துயரில் மாண்ட சுமார் 80,000 தமிழர்களை யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உயிருடன் மீண்ட ஆஸ்திரேலியப் படைவீரர்கள் சிலர் தங்களது அனுபவங்களை நூலாக கொண்டு வந்துள்ளனர். தாங்கள் பாதிக்கப்பட்ட வரலாற்றை ஆங்கிலேயர்கள் “பிரிட்ஜ் ஆன் தி ரிவெர் க்வாய்” என்ற பெயரில் 40 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படமாகவும் எடுத்து விட்டனர். அது இன்று வரலாற்று ஆவணமாக விளங்கிறது. இத்திரைப்படம் உலகெங்கும் பாரட்டப்பட்ட படம். வெள்ளையர்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்திவிட்டார்கள்.
ஆனால் நம் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் பதிவு செய்யப்படவில்லை. தமிழர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். இதுபற்றி ஓரிரண்டு நூல்களே வெளி வந்துள்ளன. ஒரு சில ஆவணப்படங்களும் வந்துள்ளது. ஆனாலும்கூட, இன்னமும் இவ்வரலாறு இன்றைய தமிழர் பெரும்பாலோனோர்க்குத் தெரியாது.
ஏன் என்பதை இங்குதான் நாம் யோசிக்க வேண்டும்.
சுமார் 60 லட்சம் யூதர்களைக் கொன்றான் ஹிட்லர். அதை அவர்கள் வெறும் புத்தகங்களாகவோ ஆவணப்படங்களாகவோ மட்டும் பதிவு செய்துவிட்டு மற்ற வேலையைப் பார்க்கவில்லை. ஒரு புத்திசாலித்தனமான முறையில் பதிவு செய்தார்கள். அதனால்தான் இன்றளவும் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களை மொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் காலாகாலத்திற்கும் இந்த பூமியில் வாழும் எல்லா மக்களுக்கும் அது தெரிந்துகொண்டே இருக்கும். ஹிட்லர் எவ்வளவு கோடூரமானவன் என்பதை உலகின் கண்முன்னே அவர்கள் நிரூபித்தார்கள். யூதர்கள் தேர்ந்தெடுத்த அனத வழி எதுவெனில் “சினிமா”தான்.
ஹிட்லர் நடத்திய யூதப் படுகொலைகள் பற்றி உலகை உலுக்கிய திரைப்படங்கள் Schindler’s Llist, The Pianist, Gloomy Sunday, Life Is Beautiful, etc., …..
ஓருவேளை, சினிமா அல்லாமல் அவர்கள் வேறு எந்த வகையிலும் அதை ஆவணப்படுத்தியிருந்தாலும் உலகின் மனசாட்சியை அது உலுக்கியிருக்காது. என்றோ நடந்த யூதப் படுகொலைகள் உருவாக்கும் அனுதாபம், நிகழ்காலத்தில் நடக்கும் பாலஸ்தீனியர்களின் படுகொலைகளுக்கும் தமிழர்களின் படுகொலைகளுக்கும் ஏற்படவில்லை. யூதர்களின் சினிமா உலகில் நிறைய சாதித்தது.
உலகில் யூதர்களுக்கு இணையான அறிவார்ந்த சமூகமாக மதிக்கப்படும் தமிழ்ச்சமூகத்திற்கு இந்தப் பார்வை இன்றாவது இருக்கிறதா? தான் எந்தளவிற்கு யாரால் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளோம் என்ற வரலாறு தெரியாத உணர்வற்ற சமூகம் தங்கள் எதிர்களை எப்படி அடையாளம் காணும்? தங்கள் பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு தீர்க்க முடியும்?
உலகில் தமிழர்களுக்கெதிராக நடந்த கொடுமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்...
1930 - பர்மாவில் தமிழர்களுக்கு எதிராக முதல் சிறு கலவரம்.
1937 - பிரிட்டிஷ் அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியை ஆட்சிமொழியாகக் கொண்டு வரும் சட்டம் கொண்டு வருகிறது. ராஜாஜி கொண்டு வந்த இந்தச் சட்டத்தை எதிர்த்து தாளமுத்து, நடராசன் என்ற இரு மாவீரர்கள் உயிர் துறக்கிறார்கள். அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படுகிறது.
1938 - ஹிந்தியை எதிர்த்து நடந்த பெரும் போராட்டத்தில் 1500 பேர் சிறை செல்கின்றனர். அதில் எழுபது எண்பது பேர் தாய்மார்கள். அவர்களுடன் முப்பது குழந்தைகளும் சிறை சென்றனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
1939 - ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான முதல் கலவரம்.
1940 - இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுப்பு.
1950 - இந்தியா ஹிந்தியை ஆட்சி மொழியாக்க சட்டம் இயற்ற முயற்சி. தென்னிந்தியர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக 15 வருடம் இருக்கும் என மாற்றப்பட்டது.
1956 - இலங்கை சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் இயற்றியது.
1957 - மலேசியா பூமி புத்திரர்களுக்கு சாதகமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியது.
1958 - ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1962 - கிட்டத்தட்ட பர்மா முழுவதற்கும் சொந்தக்காரர்களாக இருந்த தமிழர்கள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர். தமிழர்களின் பொருளாதாரம் முறிக்கப்பட்டது இந்த வருடம் தான்.
1963 - இந்தியப் பாராளுமன்றத்தில் ஹிந்தியை ஆட்சிமொழியாக்கும் விவாதம். அந்த உறுதிமொழியில், “English MAY continue till….” என்பதை “English SHALL continue till….” என்று மாற்ற நேருவுடன் அண்ணா விவாதம். பின் இதுவே சட்டமாக்கப்பட்டது.
1965 - ஹிந்தியை ஆட்சி மொழியாக்கும் முயற்சியை எதிர்த்து ஜனவரி 24 இல் தமிழகம் மாபெரும் போராட்டம். இந்திய ராணுவம் சுட்டு குறைந்தது ஆயிரம் தமிழர்கள் உயிர் இழப்பு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் இந்த நேரத்தில் இதே நேரத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வசித்த தமிழர்கள் மாபெரும் போராட்டங்களை செய்தனர்.
1967 - ஹிந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
1971 - பங்களாதேஷ் சண்டை. இதில் கலந்து கொண்டு வங்காளிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர் இழப்பு.
1976 - வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழத்தில் நிறைவேறல்.
1977 - தமிழர் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1981 - ஈழத்தில் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டது.
1983 - ஈழத்தில் கறுப்பு ஜூலை கலவரம். கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1986 - தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் ஆரம்பம். அதை எதிர்த்து 30 தமிழர்கள் தற்கொலை.
1987 - ஈழத்தில் இந்திய அமைதிப்படை சென்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை.
1991 - கர்நாடகாவில் ஒரே மாதத்தில் இரண்டு லட்சம் தமிழர்கள் உடைமைகளை இழந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போதைய கர்நாடக அரசால் அவர்களுக்கு வெறும் 1000 ரூபாய் மட்டுமே இழப்பீடாக கொடுக்கப்பட்டது.
2006 - மலேசியாவில் தமிழ் சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டன.
2007 - மலேசியாவில் பிரிட்டிஷ் அரசிடம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் அமைப்பை ஒத்துக் கொண்டதற்காக இழப்பீடு கேட்டு மூர்த்தி வழக்கு தொடர்கிறார். கோலாலம்பூரில் கிட்டத்தட்ட 50000 தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம். 2007 டிசம்பர் மாதம் தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
2008 - தலைவர்களை விடுதலை செய்ய சொல்லி பிரதமரை சந்திக்கச் சென்ற ஆறு வயது குழந்தை உட்பட பனிரெண்டு பேரை மலேசியா அரசு கைது செய்தது. அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தலைவர்கள் உட்பட போராடிய தலைவர்கள் அனைவரையும் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்தது மலேசியா.
2009 - ஈழத்தில் இரண்டு லட்சம்பேர் கொலை. அதன்பிறகும் இன்றுவரையிலும் தமிழ் இன அழிப்பு வெவ்வேறு வகைகளில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கான எந்த எதிர் நடவடிக்கைகளிலாவது உலகத் தமிழ்ச்சமூகம் ஈடுபடுகிறதா? என்பதை சிந்தித்துப் பார்க்கவுனம். இவ்வரலாறுகள் தெரிந்த சொற்ப தொகையினர் மட்டும்தான் தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வருகிறார்கள்.
வெறும் சிறு நாடாய் இருந்துகொண்டு இதுவரையில் யாருக்கும் காலணி ஆகாமல் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளையும் தன் லாபத்திற்கு பயன்படுத்திகொள்ளும் சிங்கள இனத்தின் ராஜதந்திரம், உலகெங்கும் பல நாடுகளில் பரவி வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு இருக்கிறதா?
ஏன் இல்லை?
தமிழர்கள் வரலாற்றில் தாங்கள் பட்ட கொடூரங்களை யூதர்களின் அளவிற்கு பதிவு செய்யவில்லை. அடுத்த தலைமுறைக்கு அதை உணர்த்தவில்லை. இதன் விளைவே இன்றைக்கும் தமிழகத்தில்கூட தங்கள் உரிமைகளை காத்துக்கொள்ள இயலவில்லை.
யாருக்கு என்ன நடந்தாலும் அதை ஜாதிரீதியான கண்ணோட்டத்திலேயே கவனித்து கடந்து போவதும் இன்னொரு முக்கியமான உளவியல் பலவீனம்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க,
அத்திபூத்தாற்போல எழுந்ததுதான் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். உலகில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடி நடத்திய போராட்டங்களில் இப்போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்று. மொத்த இந்தியாவும் உலகும் திரும்பிப் பார்த்தது.
இப்போராட்டத்தையும் வழக்கமாக யாரோ ஒருவர் ஆவணப்படமாகவோ வெறும் நூலாகவோ அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்துவிட்டுப் போகலாம்தான். வரலாற்றில் தனக்கு இவ்வளவு கொடுமைகள் நடந்ததை உணராத தமிழ்ச்சமூகம் இதையும்; போராடிய தன் பலத்தையும் நாளடைவில் அறியாமல் மறந்து போகலாம்தான்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதலின் நவீன வடிவமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை சினிமாவில் பதிவு செய்ய இப்படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ் அவர்கள் முயற்சித்ததுதான் புத்திசாலித்தனமான ஒன்று. வெகுசுலபமாக வெகுஜன மக்களை இப்படத்தின் செய்தி சென்றடையும். காலம் கடந்தும் நிற்கும். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னால் நடந்த சதிவலைகள், இதற்கென முழுவீச்சாய் பாடுபட்டோர் என சகல விவரங்களையும் விறுவிறுப்பான திரைக்கதை மொழியில் அருமையாக பதிவு செய்துள்ளார்.
“மெரினா புரட்சி’ திரைப்படத்தை அனைவரும் தவறாமல் பாருங்கள். முக்கியமாக அரசியல்படுத்தப்பட வேண்டிய உலகத் தமிழ் இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். தன் பலம் உணராமல் பாகனுக்கும் சேர்த்து யாசகம் பெறும் யானைகளைப் போன்று வாழும் உலகத் தமிழ்ச்சமூகம் தம் பலத்தை உணர்ந்துகொள்ளவும் தொடர்ந்து போராடவும் தூண்டிவிட இவ்வாறான திரைப்படங்கள் தமிழ் உலகில் தொடர்ந்து வரவேண்டும். அதற்கான கதவு உலகத் தமிழர்கள் இத்திரைப்படத்திற்கு வழங்கும் ஆதரவைப் பொருத்துதான் திறக்கும்.
தாங்கள் பட்ட துயரங்களைக் காட்டி உலகின் மனசாட்சியை உலுக்கிய யூத இயக்குநர்களைப் போன்று, தமிழர் துயரங்களும் உலகின் மனசாட்சியை உலுக்க இனிவரும் காலங்களிலாவது திரைப்படங்களைப் பயன்படுத்த முனைவோம். அதற்கு முன்னோட்டமாக “மெரினா புரட்சி” திரைப்படத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்வோம்.
அன்புடன்….
வி மூ

01.06.2019



No comments:

Post a Comment