29.6.21

சுஜித் - ஆழ்துளைக் கிணறு விபத்து

இப்படி ஏற்கெனவே பலமுறை உத்தரவு போடப்பட்டுள்ளது. சடங்குத்தனமான இந்த உத்தரவை யார் மதிக்கப் போகிறார்கள்? கும்பகோணத்தில் 95 குழந்தைகள் தீயில் கருகியபோதும் ஏற்கெனவே பள்ளிக்கூட விதிகள் தொடர்பாக பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருந்ததாகத்தான் அரசு தெரிவித்திருந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு என்று சட்டம் போட்டார்கள். இன்று எல்லா கடைகளிலும் மிக சாதாரணமாய் பிளாஸ்டிக் புழங்குகிறது. இவ்வாறு அரசு உத்தரவு போடும் சட்டங்களை எல்லாம் மக்கள் ஏன் ஒரு பொருட்டாக மதிக்காமல் போகிறார்கள் என்றால் இப்படிச் சட்டங்களைப் போடுகிறவர்கள் மீதோ, அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மீதோ சற்றும் மரியாதை இல்லாததுதான். அந்த நம்பிக்கையை இது சம்பந்தப்பட்டவர்கள் எப்போதுமே உருவாக்காமல் இருப்பதுதான். விளம்பரப் பலகைகள் வைக்க தடை என சமீபத்தில் நீதிமன்றம் போட்ட உத்தரவை ஆளுங்கட்சியே கண்டுகொள்ளவில்லை. நிற்க,

01. இந்தத் தேதியிலிருந்து மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டு அப்பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலரிடம் எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கிறவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு.
02. அவ்வாறு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்கும் இடத்தின் உரிமையாளருக்கு ரூபாய் 50,000 தண்டம் மற்றும் கட்டாய 15 நாட்கள் சிறைத் தண்டனை.
03. தகவல் வந்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களுக்கு அச்சம் கொள்ளும்படியான கடும் தண்டனை.
04. இனி ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதியும், பின்னர் அதைப் பயன்படுத்தும் அல்லது மூடிய விவரங்களை பார்வையிட்டு கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு என ஆணையிடப்பட வேண்டும்.
05. இதன்மேலும் ஆழ்துளைக் கிணறு தொடர்பாக அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் தண்டனையை சம்பந்தப்பட்ட இடத்திற்கான உரிமையாளருக்கும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும் விதிக்கப்பட வேண்டும்.

26.10.2019



No comments:

Post a Comment