30.6.21

"வாழ்வெனும் வெறுங்கதை"

இந்த பனி பொழியும் இரவிடமும், குளிரிடமும், நிலவொளியிடமும், தூரத்தில் தெரியும் இடுகாட்டிடமும், இருக்குமிடம் தெரியாமல் இருட்டில் மௌனித்திருக்கும் மலையிடமும், வயற்காட்டிலிருந்து ஒலிக்கும் ஓராயிரம் பெயர் தெரியா உயிரிகளிடமும், பூட்டப்பட்ட கோயிலுக்குள் தெரியும் சாமியிடமும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வானில் மினுக்கும் நட்சத்திரங்களிடமும், ஏரியிடமும், குளத்திடமும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த பலகோடி மனிதர்களின் கதைகளிருக்கலாம். ஓரளவு இயற்கையைப் புரிந்த நாளிலிருந்து ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் அவைகளிடமிருந்து அவன் அநேகர்களின் கதைகளைக் கேட்க ஆர்வப்படுகிறான். மனிதர்களின் வாழ்வும் இந்த பூமியின் மாற்றங்களும் பால்வீதியின் நிகழ்வுகளும் இறுதியில் கதைகளாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. பழகியவர்களும் பிரிந்தவர்களும் இருப்பவர்களும், வலியும் சிரிப்பும் அவமானத்தையும் தந்துவிட்டுப் போனவர்களும் இறுதியில் கதைகளாகவே சேமிக்கப்படுகிறார்கள். நாளை என்பது இன்றைய கதைகளை உள்ளடக்கியது. நேற்று என்பது இன்றைய கதைகள் மட்டும் இல்லாதது. 'இந்த கதைகள்' என்பது நினைவுகளின் வார்த்தைகளின் இடுக்குகளில் சுருக்கப்பட்டவை என்று பொருள்படும். அதாவது கடந்தகாலத்தை நிகழ்காலமாக்குவது. இதன்படி நினைத்த நொடியில் சங்க காலத்திற்கு சென்று உலவிவிட்டு வரலாம். புத்தனுடனும் பழகலாம் விவாதிக்கலாம். ஆசீவக அய்யனார்களுடனும் கைகுலுக்கலாம். பெரியாருடன் பேசலாம். யேசு சிலுவையில் அறையப்படுவதை வேடிக்கைப் பார்க்கலாம். பல வருடத்திற்கு முன்னர் ஆணவத்தால் ஊரில் அழிந்தவனைப் பார்த்து வருத்தப்படலாம். தனிமை என்பதுதான் என்னவாக இருக்கிறது எனில், நாம் கதைகளை உண்ணும் நேரம்; அல்லது கதைகள் நம்மை உண்ணும் நேரமாக இருக்கிறது.

17.11.2019



No comments:

Post a Comment