தமிழ்நாட்டில் முற்போக்கு & புரட்சி பேசுபவர்களில் கனிசமானோர் மாற்று மொழியினராக இருப்பதால் தமிழ் முற்போக்காளர்கள் தங்கள் அடையாளங்களின் மீது சேறு பூசப்படும்போது கவனமாக இருப்பது நல்லது. அதேபோல் கம்யூனிஸ்ட் & திராவிட இயக்கத்தின் சார்பாக ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பொறுப்போடு பேசவேண்டும். இவர்களின் சில பகுத்தறிவற்ற வறட்டு வாதங்களால் இந்தக் கருத்தியல்கள் மீதே பலரும் வெறுப்பு கொள்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.
இராஜராஜன் மீது இப்போது சேறு பூசி ஆகப்போவது என்ன? தலித்தியத்தின் நியாயத்தை பலரும் உணரும்படியான அணுகுமுறையைத் தவிர்த்து வெறுப்பரசியல் கொண்டு யாரை எப்படி மாற்ற முடியும்? அம்பேத்கர் நடைமுறைப்படுத்திய உரிமைகளை சட்டங்களை தொய்வில்லாமல் செயற்படுத்த சாட்டை வீசுவதையும் முனைப்புகாட்டுவதையும் விடுத்து எப்போதும் இடைநிலை சாதிகளை பகையாக மாற்றுவதிலே கருத்தாய் இருப்பது யாருக்கு லாபம்?
தனித் தொகுதிகளில் நின்று வென்றோர்கள் திறம்பட செயல்பாட்டுடன் இருக்கிறார்களா? அவர்கள் மீது சாட்டை வீசுவதில் யாரேனும் அக்கறை செலுத்துகிறார்களா?
தம் தரப்பில் குறைகளே இல்லையா? எப்போதும் இடைநிலைச் சாதிவெறியை உசுப்புவதுதான் தலித் அரசியல் பார்வையா?
அம்பேத்கரோ, நாடார்களின் முன்னோர்களோ இப்படி வெறுமனே பேசிக்கொண்டே மட்டும் இருக்கவில்லை. இருந்திருந்தால் எதுவும் மாறியிருக்காது.
உண்மையான அக்கறையிலிருந்துதான் மாற்றம் பிறக்க முடியும். பக்குவமற்று கருத்தை வெளிப்படுத்துவதால் மக்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அதிகரிக்கவே செய்யும். சகல மக்களுக்கு இடையிலும் தம் அறிவால் இணக்கம் ஏற்படுத்த திறமோ செயல்திட்டமோ இல்லாதவர்கள் அமைதியாக இருப்பது நல்லது.
கருத்து சுதந்திரம் என்ற பேரில் இராஜராஜனை விமர்சித்த பா.ரஞ்சித்தை ஆதரிக்கும் பலர், இதே கருத்து சுதந்திரத்துடன் அம்பேத்கரின் முரண்பாடுகளை விமர்சிப்பவர்களை ஏற்றுக்கொள்கிறார்களா?
இடைநிலை சாதி மக்களை அவரவர் சொந்த சாதி உணர்வுக்கு எதிராய் திருப்பி மாற்றிக்காட்டிய பெரியார் மீது விமர்சனம் வைப்பது அறிவுடைய பார்வையா? இது எதற்கான, யாருக்கு எதிரான சவக்குழி?
இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர்களுக்கான ஒதுக்கீட்டு உரிமைகளுக்கு மேல்ஜாதிக்காரர்களால் ஆபத்து வந்தால் முதல் போர்க்குரல் ஒலிப்பது தமிழகமாக இருக்கும். இதில் இடைநிலைச் சாதியினரும் முன்னிலை வகிப்பர். பெரியாரின் சாதனை இது. இவர்களை தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்வையையும் தோழமையும் வளர்க்காமல் விமர்சனம் என்ற பேரில் எப்போதும் வெறுப்பை மட்டுமே கக்கினால் அது தலித் அரசியலாக இருக்க வாய்ப்பில்லை.
எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைகளில் தாமும் பங்கேற்று போராடும்போதுதான் பொதுத் தலைமைக்கு நகர முடியும். பிறகு பொதுத்தொகுதிகளில் நின்றால் மட்டும் எப்படி வென்றுவிட முடியும்? ஒடுக்கப்பட்டோரில் இந்தப்பார்வையுடன் செயல்படுவது யார்?
தலித் பிரச்சினைகளுக்கு மட்டும் போராடுவதும் குரல் கொடுப்பதுமாக மட்டுமே இருந்துகொண்டு தனியே நிற்பது யார்?
குற்றங்களைப் பற்றி மனசாட்சியற்றுப் போகும் ஜாதிய உளவியலுக்கு தலித் அரசியல் என்று தனியாக நின்றுகொண்டு எப்படி மருத்துவம் பார்க்க முடியும்? திராவிட இயக்கங்களும் கம்யூனிச இயக்கங்களும் இருப்பது ஒடுக்கப்பட்டோருக்கு வலுதான்.
தமிழர் உணர்வுக்கும் உரிமைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் திருமா போன்றோர் பாதையே ஒடுக்கப்பட்ட தரப்பிலிருந்து வெகுமக்களுக்கான பொதுத்தலைமை உருவாக வழி கோலும். இதுதான் இனி தேவை. இதற்கு பாடுபடுவது நல்லது. வெறுப்பூட்டும் பேச்சுக்களால் ஆகப்போவது எதுவுமில்லை.
16.06.2019
No comments:
Post a Comment