ஆழ்துளைக் குழாயில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்பு பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர் அங்கேயே இருந்தார். அவரது வேட்டியெல்லாம் மண் கரையானது. அவர் தன் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடக்கூட செல்லவில்லை. அவர் யாரென்று அவர் பகுதியிலுள்ள எல்லா மலைகளுக்கும் தெரியும். கல்குவாரி தொழில்நுட்பம் திறம்பட தெரிந்தவர். அப்பேர்ப்பட்ட மனிதர் அங்கே இருந்தாரெனில் அது எவ்வளவு பெரிய சேவை?. இதைப்போய் குறை சொல்கிறார்கள் பலர். அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதல்வருடன் பேசி ராணுவ ஹெலிகாப்டர்களில் பேரிடர் குழுவை வரவைத்தார். இதைக்கூட செய்ய முடியாமல் அங்கு அமைச்சர் எதற்கு என்று கேட்பவர்கள் யோசிக்கவும். கண்ணை மூடிக்கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள். கடைசி நேரத்தில்கூட அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் மக்கள் மனம் தாங்க மாட்டார்கள் என்ற கவலையில்தான் மருத்துவமனையிலிருந்து சிறுவன் உடலை நேராக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றது அரசு. கவனக்குறைவால் ஏற்படும் சிறிய அசம்பாவிதங்களையே கையாளத் தெரியாத அரசு என்று நாட்டைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்வது ஒன்றுதான், தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் எல்லாம் தொழில்நுட்ப மேதைகள்தான் பாடம் எடுக்கிறார்கள். வருடந்தோறும் அவர்களும் அவர்களின் மாணவர்களும் புதிது புதிதாக கண்டுபிடிக்கும் கருவிகளுக்கு அரசு ஆதரவு கொடுத்து ஊக்குவித்து வருகிறது. நம்மை ஆள்பவர்களுக்கு இந்த அறிவு இல்லாமலொன்றும் இல்லை. அணு உலை விபத்து ஏற்பட்டால்கூட இப்படி யாராவதொரு அமைச்சர் உங்கள் அருகில் அக்கறையுடன் அமர்ந்திருப்பார் என்பதை நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. சிலர் அரசுக்கு ஒத்தூதி மக்களின் அடிமைத்தனத்தை ஆதரித்து வளர்ப்பதாகவும், இவர்களைப் போன்றோரால்தான் ஆளுந்தரப்பினர் எதையும் பொருட்படுத்துவதில்லை என்றும் விமர்சிக்கார்கள். ஒரு சாதாரண விளம்பரப் பலகையால் நிகழ்ந்த விபத்திற்கே காற்றையும் குற்றவாளியாக்கிய தொலைநோக்கு சிந்தனையுடன் ஆளுந்தரப்பினர் செயல்படுவதை புரிந்துகொள்ள இயலாத சிறுமதி கொண்டோர் எப்படியும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். இன்னொருமுறை ஒரு குழந்தை விழுந்தாலும்கூட எங்கள் அக்கறை துளியும் மாறாது; குறையாது என்பதை நீங்கள் உணரத்தான் போகிறீர்கள்.
No comments:
Post a Comment