மேடைத் தமிழை சுவைபட அரங்கேற்றியது திராவிட இயக்கம். அதுவரை கேளாத புது நடையில் பேச்சுத் தமிழைக் கேட்டு இன்புற்றனர் தமிழர்கள். சீமானின் மேடைப் பேச்சும் அதே திராவிட வழியிலானதுதான்.
முன்னர் கலைஞர் பேசினார். ஆனாலும் தமிழர் மண்ணில் தமிழர்களுக்கெதிரான நாசகார வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தது. வடநாட்டு மார்வாரிகளை கேரளாவைப் போன்று இங்கு யாரும் கட்டுப்படுத்தவில்லை. இதன் விளைவு சென்னையில் தமிழனுக்கு வீடு வாடகைக்கு இடம் தருவதில்லை மார்வாரிகள் என்பதில் வந்து நிற்கிறது இன்று.
திராவிட இயக்கத்தால் பல நன்மைகள் விளைந்தது இங்கே என்பது உண்மைதான். ஆனால் காலங்கள் சுழல சுழல பிரச்சினைகள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதை திராவிட இயக்க ஆதரவாளர்கள் உணர வேண்டும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியும்கூட கலைஞர் அன்றைக்கு எழுதிய வசனங்கள் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது என்றால் அதிமுக & திமுக ஆட்சிகள் எந்தளவுக்கு இருந்துள்ளது என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
தற்போது தமிழ் நாட்டில்; டெல்லியின் பிடி இறுகியுள்ளது. தினம் தினம் ஏராளம் பிரச்சினைகள் முளைக்கிறது. ஆனால் களத்தில் இறங்குவோர் எண்ணிக்கையோ மிக சொற்பமாக இருக்கிறது. எல்லா கட்சிகளும் தமிழர்களை பங்கு போட்டு பிரித்து வைத்திருப்பதால் கட்சிகளின் கட்டுப்பாட்டிலேயே தமிழர்கள் இருக்கிறார்கள். தான் சார்ந்த கட்சி அறிவிக்கும் போராட்டத்தில் மட்டும் பங்கெடுப்பது, மற்ற போராட்டங்களை வேடிக்கை பார்ப்பது என்பதே அரசியல் என்றாகிவிட்டது. இதோடு ஜாதி சங்கங்களின் பிடியிலும் ஜாதிக் கட்சிகளின் பிடியிலும் மத அமைப்புகளின் பிடியிலும் மீதியுள்ளோர்.
இவ்வாறான சூழலில் தமிழ், தமிழர், தமிழினம் என்று சீமான் போன்றோர் பேசுவது அவசியமான ஒன்றுதான். ஆனால் பேசிக்கொண்டே இருப்பதுதான் மீண்டும் பிரச்சினை. அப்படியானால் யாராவது போராடி சிறைபட்டு சாகட்டும் என்று சொல்லவில்லை.
எல்லா பிரச்சினைகளுக்கும் அந்தந்த பகுதி மக்களையே அணிதிரட்டி அமைதியான போராட்டங்களை முன்னெடுக்கச் செய்து தொடர் சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்துவதுதான் இப்போதைக்கு தேவை. பெருவாரியான மக்கள் பங்கெடுத்தால் சட்டமும் நீதியும் பயங்காட்டாது.
போலிசுக்காரர்களுடன் கைகுலுக்கிகொண்டே போராட்டங்கள் பலவும் மேலைநாடுகளில் நடத்தப்படுகிறது. அவர்கள் கூலிப்படைகள். அவர்களோடு மோதி அடையப்போவது ஒன்றுமில்லை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் மக்களைத் திரட்டித் தொடர்ந்து அமைதியாக சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டால் விழிப்புணர்வும் போராடும் எண்ணமும் இளைஞர்களிடம் பெருகும்.
முதலில் மக்கள் ஒன்றுகூட எந்த வழியும் ஏற்படுத்தாமல் வெறுமனே மேடைகளில் மட்டும் 'திராவிடம் திராவிடம்' என்று தாக்கிப் பேசிக்கொண்டிருந்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
சன் தொலைக்காட்சியில் ஞாயிறு கிழமைகளில் பட்டிமன்றம் நடக்கும். பலரும் கருத்தாக சுவையாக பேசுவார்கள். கைதட்டுவார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் கலைந்து சென்றுவிடுவார்கள். இதேபோன்றே பல தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றங்கள் நடக்கும். இவைகளின் நோக்கம்? பட்டிமன்றங்கள் என்பது அந்த நேர செவி இன்பத்தை ஊட்டக்கூடிய ஒன்று அவ்வளவுதான். அதிலும் நகைச்சுவையாகப் பேசுவோர் பங்குபெறும் நிகழ்ச்சிகளைத்தான் மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. சீரியசாகப் பேசும் பல அரட்டை அரங்கங்களை விசுவும் டி.ராஜேந்தரும் நடத்தினார்கள். விளைவு? அவர்களை வேண்டுமானால் நாயகர்களாக மக்கள் மத்தியில் கட்டமைத்துக்கொள்ள இவைகள் உதவுமே தவிர, சமூகத்திற்கு யாதொரு பயனுமில்லை. இவர்களோடு மேடையில் அழுத ஒரு சிலரும் பயனடைந்திருக்கலாம்.
அரட்டை அரங்கம், பட்டி மன்றங்கள் எல்லாம் அரசியல் உணர்வுகளை; கொதிப்புகளை மடைமாற்றி காயடிக்கும் ஆளும்வர்க்கத்தின் இன்னொருவகை உத்திதான்.
இதுபோல்தான் இப்போது சீமானும் தொண்டை வற்றப் பேசிக்கொண்டிருக்கிறார் மேடைகளில். ஆனால், தமிழ்நாடெங்கும் பல கொடுமைகள் நடந்து கொண்டுதானிருக்கிறது, அவர் சவால் விட்டு சவால் விட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார். சீமானுடன் ஒப்பிட்டால் கலைஞர் பன்முகத் திறம் கொண்டவர், ராஜதந்திரி. ஈழப்போரின்போதும் கச்சத்தீவு தாரை வார்ப்பின் போதும் இந்தப் பதவி சுகம் அவரையே செல்லாக் காசாக்கி விட்டது. சீமான் போன்றோர்கள் எம்மாத்திரம்?
மக்களைப் போராட அணி திரட்டும் செயலுக்கு வித்திடாமல் ஒருவன் வந்துதான் எல்லாவற்றையும் மாற்றுவான் என ஏங்க வைப்பது பழைய உத்தி. இவர் திராவிடத்தைக் குறை சொல்வது வேடிக்கையானது. தன்னிடமும் புதுவழி இல்லை என்பது தெரியாதபடி உணர்ச்சி பொங்கப் பேசி பலரை நம்ப வைக்கிறார்.
அதிகம் பேசாமல் செயலில் மட்டுமே இறங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களே தான் தனி ஈழத்தை பெறுவேன் என்று பேசியதில்லை. அது இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்றார்.
தி.மு.க, ஓரளவுக்கேனும் சாதித்தது என்றால் அதற்கு முன்னோடியாக பதவி ஆசையில்லாத போராட்ட இயக்கமாக இங்கே தி.க. பல ஆண்டுகளாக இருந்ததுதான். அப்படி எதுவும் சீமானுக்கு இல்லை. சீமானின் பேச்சுக்கள் அவரைப் பற்றிய பிம்பத்தைத்தான் கூட்டுகிறதே தவிர எந்தப் போராட்டத்தையும் தன்னெழுச்சியாக தூண்டவில்லை என்பதை கவனிக்கவும்.
ஜாதி, மதம், கடவுள், திராவிடம் என்ற கருத்து முதல்வாதப் பார்வைகளை ஆதரித்தும் எதிர்த்துமே எப்போதும் தமிழர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை செலவிட்டுக் கொண்டிருக்காமல் சற்று நிகழ்காலப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்வது நல்லது.
போராட்டங்களில் பயமின்றி கூட்டம் கூட்டமாக ஆர்வத்தோடு மக்களை பங்கெடுக்க வைக்கும் திறன் உள்ளோரே தற்போதைக்கு தேவையான தலைவர்கள். அப்படி யாரேனும் உள்ளனரா?
ஆனால், தேர்தல் அரசியலில் தங்களை நாயகனாக்கிக் கொள்ளும் வரையறைகளோடு மட்டுமேதான் பலர் செயல்படுகின்றனர்; பேசுகின்றனர்.
தமிழ் உணர்வு உள்ள இளைஞர்கள் மேடைப் பேச்சுக்கு மயங்காமல், யார் போராட்டங்களை முன்னெடுக்கிறார்களோ அவர்களை ஆதரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக சீமானின் பேச்சுக்கு சிலாகிப்பவர்கள், போராட்டங்களைத் தூண்டிவிட அது பயனளிக்கிறதா என்றும் மேடைப் பேச்சு, பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பழைய பாணியில் செவி இன்ப ரசிகத் தன்மைக்கு மட்டும் பயன்படுகிறதா என்றும் சற்று சிந்திக்க வேண்டும்.
சீமான் பேசக்கூடாது என்பதோ, அவருக்கு இப்படிப் பேசும் தகுதியில்லை என்பதோ, அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதோ இப்பதிவின் நோக்கமல்ல. தமிழர் மண் படும் இன்னல்களை கொடூரங்களை யாரும் பேசலாம். புதிய தமிழ் இளையோர்களின் ஆற்றலும் வேட்கையும் செவி இன்பத்தை சுவைப்பதோடும் வாக்கு அரசியலுக்கு மட்டுமேயும் நின்றுவிடக்கூடாது என்பதே.
16.05.2019
No comments:
Post a Comment