3.6.21

சிரியப் போரின் கொடூரம்

யார் என்ன எப்படித்தான் முயற்சித்தாலும் 100 ஆண்டுகள் வாழப்போவதில்லை. யாரோ எங்கோ ஒரு சிலர்தான் 100 வயதுவரையிலும் வாழ்கிறார்கள். உலவும் ஓராயிரம் நோய்களால் தானாய் நிகழப்போகிற மரணத்தை ஜாதி, மதம், மொழி, இனம், பதவி, ஆயுத விற்பனை, எண்ணெய் விற்பனை, லாப வெறி, மது போதை, சொத்துக்குவிப்பு, சுரண்டல் எனும் பலவற்றின் பேரால் ஏன் சாவை விரைவாய் வரவழைத்து பிற எளியவர்களுக்கு பரிசளிக்கிறார்கள் ஈவிரக்கமற்றவர்கள்? நிம்மதியாக மகிழ்ச்சியாக பூமியில் வாழ்ந்துவிட்டுப் போவதில் ஏன் இவ்வளவு பிரச்சினை?

மதத்திற்காக எளிதில் உணர்ச்சிவசப்படும் முஸ்லீம் நாடுகள்தான் இன்று அழிந்துபோவதில் முன்னணியில் நிற்கிறது. இந்தியாவையும் இப்படி தீவிர மதவெறி நாடாக்க உலக முதலைகளின் அடியாள் கூட்டம் அதிதீவிரமாய் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறது.
தனியுடைமை எண்ணமும் சுரண்டிப் பிழைக்கும் எண்ணமுமே எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது.
போர் இல்லாத பூமி சாத்தியப்படாதவரை இங்கு இருக்கும் எல்லா கல்வி நிலையங்களும் கடவுள் வாழும் இடங்களும் அர்த்தமற்றவையே.
கல்வி, மருத்துவம், வேலை, உணவு, உறைவிடம், உறக்கம், காமம்... இதுதான் அடிப்படைத் தேவை. எல்லா நாடுகளிலும் இவை எல்லாமும் பணம் கொழிக்கும் வணிகமாக்கப்பட்டுவிட்டது.
பூமியில் உள்ள வளங்களை எல்லோரும் பயன்படுத்தி உழைத்து வாழும்படியான ஒரு மேன்மைப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்புவது முடியும்தான். ஆனால் உலக பணக்காரர்களும் அதிகாரமுள்ளவர்களும் எங்கும் சிறு நாட்டிலும் இப்படி ஏற்பட்டுவிடாதபடி கவனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி மத இன மொழி லாப வெறி கொள்ளும் மனிதர்களே அவர்களுக்கு தலைமுறைதோறும் தேவைப்படுகிறார்கள். ஜாதி மத உணர்வு வெறி மிகுந்த நாடுகளில் தானாய் இப்படி மனிதர்கள் உருவாகிவிடுவது அவர்களுக்கு கூடுதல் பலமாய் இருக்கிறது. ஒரு நாட்டில் உண்மையிலே என்னென்ன பிரச்சினை? யாராரால் எப்படியெல்லாம் ஒரு நாடு கொள்ளையடிக்கப்படுகிறது? என்பதையெல்லாம் மூடி மறைக்க அறிவற்ற கூட்டம் இருப்பது எப்போதும் அவர்களுக்கு அவசியமாகிறது.
உலகமெங்கும் மார்க்சியக் கல்வியை பரவலாக்குவதும், மேற்குறிப்பிட்ட வெறித்தனங்களிலிருந்து படித்தவர்களாவது வெளிவராத வரையிலும் சிரியாவில் நெடுநாட்களாய் நடக்கும் இப்போர் வெகுசீக்கிரத்தில் எல்லா நாடுகளுக்கும் பரவும்.

26.02.2018



No comments:

Post a Comment