3.6.21

மிகவும் பிடித்த கவிதை

ஒருவேளை நம் காதல் 
நிறைவேறி இருந்தால்

உனக்கு நானும்
எனக்கு நீயும்
சலித்துப் போயிருக்கலாம்!

புத்தகத்தில் மயிலிறகோடு
நான் பத்திரமாய் வைத்திருக்கும்
உன் கூந்தல் முடி
உணவில் கிடந்ததற்காக
உன்னை நான்
திட்டித் தீர்த்திருக்கலாம்.

என் செல்ல மகளுக்கு வைத்து
அழைத்து மகிழும் உன் பெயர்
மூதேவியாகத் திரிந்திருக்கலாம்.

உன்னை முள் குத்தியதற்கே
மூன்று நாட்கள் தூங்காதவன்
முச்சந்தியில் வைத்து
அடித்துத் துவைத்திருக்கலாம்

உன் தாயினும் மேலாக
அன்பு செய்வேன் என்றுனை
நம்ப வைத்தவன் தான்
வரதட்சணை கேட்டு
உனை துரத்தியிருக்கலாம்.

தூரத்தில் இருந்தபோதும்
பக்கத்தில் இருக்கும் நாம்
பக்கத்தில் இருந்தும்
தூரமாய் இருந்திருப்போம்.

எதிர்பாராத் தருணங்களில்
எதிரெதிரேக் கடக்கையில்
உள்ளுக்குள் ஒரு பூ பூக்குமே!

அதை உணராமல் இருந்திருப்போம்.

ஐம்பது வயதிலும் தேவதைகள்
இருப்பார்கள் என்பது
எனக்குத் தெரியாமல் போயிருக்கலாம்.

நீ பிறந்த ஊரை,
நீ வளைய வந்த தெருவை,
உன் வாசம் தங்கிய வீட்டை

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு
நான் கடக்கும்இந்த வேளையிலும்
இதயம் இத்தனை துடிதுடிக்கிறதே

அது துடிக்காமல் போயிருக்கும்

காதல் தோல்வி தான்
எத்தனை மகத்தானது!

13.02.2018



No comments:

Post a Comment