(பக்: 176, விலை: 175 ரூ, தோழமை வெளியீடு)
1927 ஆகஸ்டு 5-ம் நாளில் பிறந்து 30 வயதில் பெரும் புகழின் உச்சிக்குப் போய் 47 வது வயதில் சாப்பிடவும் பணமின்றி பெரும் வறுமையில் வீழ்ந்து 1974 மார்ச் 8-ம் நாள் இறந்துபோன தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நகைச்சுவைக் கலைஞன் சந்திரபாபுவின் வாழ்க்கைப் பற்றிய சுருக்கமே இப்புத்தகம்.
புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள சில...
மீனவ சமூகத்தில் பிறந்தவர். தீவிர கிறித்தவ நம்பிக்கையாளர். வசதியாக இருந்தபோது எத்தனையோ ஏழைகளுக்கு எவ்வளவோ உதவி செய்தவர். தேனாம்பேட்டையில் ஒருமுறை குடிசைகள் எரிந்துபோக மீண்டும் அங்கு 250 குடிசைகள் கட்ட இராம.அரங்கண்ணலுடன் ஒத்துழைத்தவர். எம்.ஜி.ஆரை மிஸ்டர் என கூப்பிட்ட ஒரே ஆள். இவரது அப்பா ரோட்டரிக் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். காங்கிரசுக்காரர். சத்தியமூர்த்தி என்பவரின் மகள் லட்சுமி என்பவரை ரோட்டரிக் திருமணம் முடித்துவிட்டு அடிக்கடி சிறைக்குப்போய்விட அப்போது சிறுவயதில் இவரைப் பார்த்துக்கொண்டவர்தான் பெருந்தலைவர் காமராசர். சந்திரபாபுவின் திருமணத்திலும் சாவிலும் நேரில் வந்தவர் காமராசர்.
30 வயதில் ஷீலா என்றொரு 17 வயது ஆங்கிலோ இந்தியப் பெண்ணை விரும்பி மணம் முடிக்கிறார் சந்திரபாபு. அப்போது புகழின் உச்சியில் இருக்கிறார். சிலநாட்களிலேயே அப்பெண் தன் பழைய காதலனுடன் லண்டன் சென்று வாழப்போவதாகச் சொல்ல பெரும் அதிர்ச்சியடையும் சந்திரபாபு அதற்கு எந்த தடையும் சொல்லாமல் அப்பெண் லண்டன் செல்ல பத்திரமாக அனுப்பி வைக்கிறார். பிறகு கடைசிவரையில் வேறு திருமணமே செய்துகொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தைப் படித்துதான் "அந்த 7 நாட்கள்" என்ற படத்தை பாக்யராஜ் எடுத்தாராம்.
இப்படி மனிதாபிமானமுள்ள பெரும் நகைச்சுவைக் கலைஞனாக இருந்த சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தை இயக்க ஆரம்பித்து பெரும் சிக்கலில் மாட்டி சொத்திழந்து கடன்காரனாகி குடிகாரனாகி வாழ்வை முடித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் இப்படி பலபேரின் வாழ்வை அழித்துள்ளார் என்பது இன்னும் பலருக்கும் தெரியாத வெளிச்சத்துக்கு வராத உண்மைகள். இதற்கான காரணங்களைப் படித்தால் படுகேவலமாக இருக்கிறது. 'அடிமைப்பெண்' திரைப்படத்தில் நடிக்கும்போது தவறி விழுந்த ஜெயலலிதாவை சந்திரபாபு தொட்டுத் தூக்கினார் என்பதும் அதிலொரு காரணமாம். தன்னை பெரிய வள்ளலாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்வதிலேயே எம்.ஜி.ஆர் எப்போதும் முனைப்பாக இருந்துள்ளதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.
இதேபோல் ஓஹோவென வாழ்ந்து சொந்தப் படம் எடுத்து வெற்றி பெற்றும் ஏமாற்றப்பட்டு கடனில் வீழ்ந்து குடிக்கு அடிமையான 'பாசமலர்' சாவித்திரிதான் சந்திரபாபுவுக்கு கடைசி காலத்தில் பல உதவிகள் செய்துள்ளார். அவரும் உடுத்த மாற்று உடையின்றி வாழ்ந்து மறைந்தது பெரும் கொடூரம். இருவருமே கடைசிக்காலத்தில் விரக்தியால் ஒன்றாகவே போதையில் வீழ்ந்துள்ளனர்.
ஒருமுறை சந்திரபாபு தன் கடைசிக்காலத்தில் ஒரு முஸ்லீம் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று சாப்பிட்டு தன் அம்மாவுக்கும் சாப்பாடு எடுத்து வந்தாராம்.
புத்தகத்தை படித்து முடிக்கையில் மனம் பெரும் பாரமாகிவிட்டது. 95% வீதம் பித்தலாட்டக்காரர்களும் நேர்மையற்றவர்களும் நிறைந்த திரையுலகில் அத்திபூத்தாற்போல சில நல்ல மனிதாபிமான கலைஞர்களும் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட சிலரது வாழ்வும் இப்படி சின்னாபின்னமாவது பெருங்கொடுமை.
சொந்த வாழ்வில் எவ்வளவோ அவமானப்பட்டு துன்பப்பட்டு மெழுகாய் தங்களை எரித்துக்கொண்டு நடிப்பிலும் பாடலிலும் எழுத்திலும் மக்களை மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா காலத்திலும் கலைஞர்கள். அப்படியான, கடந்தகாலத்தின் ஒரு அழியா உன்னத நகைச்சுவைக் கலைஞன்தான் சந்திரபாபு. இன்னும் வெளியே அறியப்படாத சந்திரபாபுகளும் சினிமாவில் அதிகம்தான்.
No comments:
Post a Comment