2.6.21

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" - ஜான் பெர்க்கின்ஸ்

(ப-336, விலை-230 ரூ, பாரதி புத்தகாலயம்)

*
ஜான் பெர்கின்ஸ் ‘மெய்ன்’ என்னும் சர்வதேச ஆலோசனை நிறுவனத்தில் தான் பார்த்த பொருளாதார நிபுணர் வேலையை ‘அடியாள் வெலை’ என கூறுகின்றார். கௌரவமான அந்த டிப்ளமெடிக் போர்வையில் தான் விற்ற வசீகரமான பொய்களை நாடு வாரியாக பட்டியலிடுகின்றார். அமீனா புகுந்த வீடு மாதிரி அமெரிக்கா புகுந்த நாடுகள் அடைந்த நிலமை நம்மை சிந்திக்க வைக்கின்றது.
பன்னாட்டு நிதி உதவிகள் என்ற பெயரில் நாடுகளை கடன் வாங்க ஊக்குவிப்பது தான் இவர் போன்ற தாதாக்களின் முக்கிய பணி. கடன் வாங்கும் நாடுகள் அடுத்த 25 ஆண்டுகளில் எப்படியெல்லாம் வளர்ச்சியடையும் என்று பொய்யான புள்ளி விவரங்களை அள்ளி வழங்கி அமெரிக்க வணிக வலைக்குள் விழச்செய்வது அதன் துவக்கம். ஏழை நாடுகளுக்கு கடன் தந்து உதவுவது நல்ல விஷயம் தானே என நினைகின்றீர்களா? ஒரு நாட்டை விநோதமான முறையில் கொள்ளை அடிப்பதற்கே இந்த கடன் என்ற வலைகளை பன்னாட்டு நிதி என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு அமெரிக்கா தருகின்றது. லாபவெறியே அவர்களின் பிரதான நோக்கம் என்பதை விவரிக்கிறது இந்த புத்தகம்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட சோவியத் எழுச்சியினால், உலகை ஒரு குடையின் கீழ் ஆளும் வல்லரசு கனவை அணு ஆயுத யுத்ததால் சாதிக்க முடியாது என்பதால் அமெரிக்கா கண்டுபிடித்த மாற்று வழிதான் இந்த பொருளாதார ஆக்கிரமிப்பு என்கின்றார் பெர்கின்ஸ்.
இந்த ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் வகையில் கவர்ச்சியான புள்ளிவிவரங்களைச் சொல்லி பன்னாட்டு நிறுவனங்களின் நிதியை இந்த நாடுகளுக்கு பெற்றுத் தருவது. இந்த நிதியுதவி மின் நிலயங்கள், நெடுஞ்சாலைகள், துறை முகங்கள், விமான நிலையங்கள், தொழிற் பூங்காக்களாக வழங்கப்படும். இந்த நிதியுதவிக்கான நிபந்தனை அமெரிக்க நாட்டை சேர்ந்த பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்கள்தான் இவற்றையெல்லாம் நிர்மாணிக்க வேண்டும் என்பதாகும். சுருக்கமாக சொன்னால் பெரும்பகுதி பணம் அமெரிக்காவை விட்டு வெளியே செல்வதில்லை. நியூயார்க்கிலோ, ஹட்சனிலோ, சான் பிரான்ஸிஸ்கோவிலோ உள்ள நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு மாற்றப்படுகின்றது அவ்வளவுதான் என்கின்றார் ஜான் பெர்க்கின்ஸ்.
பணம் உடனடியாக கடன் கொடுத்தவர்களுக்கே திரும்பி விடுகின்றது. கடன் வாங்கிய நாடு அதை அசலும் வட்டியுமாக திருப்பி தரவேண்டும். பொருளாதார அடியாட்களின் அடுத்த பணி கடன் வாங்கிய நாடுகளை ஓட்டாண்டியாக்குவது. பொருளாதார அடியாட்களின் வேலை முழுமையடைந்து விட்டால் அந்நாடு கடனையடைப்பது சாத்தியமே இல்லாத நிலையை அடைந்து விடும். எப்போதும் கடன்காரர்களுக்கே கட்டுப்பட்டு நடக்கும் . ராணுவத்தளங்களோ, எண்ணெய் போன்ற இயற்கை வளங்களோ, ஐ.நா. சபையில் ஓட்டுகளோ தேவைப்படும் போது இந்த கடன் வலையில் விழுந்து விட்ட நாடுகளால் அமெரிக்காவின் கட்டளையை மறுக்க முடியாது.
தனிமனித சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் தழைத்தோங்கும் ஜனநாயக ஆதரவாளர், உலக காவலர், போன்ற அமெரிக்காவின் ‘ஜென்டில்மேன்’ முகமூடியை கிழித்தெறிகிறது பெர்கின்ஸின் இந்த ஒப்புதல் வாக்குமூலம். தப்பித்தவறி இந்த திட்டங்களை நாட்டு நலன்களுக்கு பயன்படுத்திய பனாமாவின் அதிபர் ஒமர் டோரிஜோஸுக்கும், ஈக்வடாரின் குடியரசு தலைவரான ரோல்டோஸுக்கும் மரணம் விமான விபத்துகளாக பரிசளிக்கப்பட்டது. அர்பென்ஸ், மொஸாடெக், அலெண்டே என பேரரசின் ஆட்சி வெறி காவு கொண்ட ஒரு பெரிய கொலை பட்டியலையேத் தருகின்றார் பெர்கின்ஸ்.
எண்ணெய் வள இஸ்லாமிய நாடுகள் தங்கள் எண்ணெய் சப்ளையை நிறுத்தி அமெரிக்காவின் கண்களில் கையைவிட்டு ஆட்டிய வீரக்கதையும், அதே வேகத்தில் பெட்ரோ டாலர்களை சவுதி அரசு அமெரிக்காவின் காலடியில் தாரை வார்த்து கௌரவமான நட்பைப் பெற்றுக் கொண்ட அவலக்கதையும், அமெரிக்காவின் சார்பில் சவுதி ஒசாமாவை ஊட்டி வளர்த்த நட்பின்கதையும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.
உலக அமைதி என்ற போலிப் பெயரில் அமெரிக்கா ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் டாலர் செலவிடுகின்றது. ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும், மற்ற அடிப்படை வசதிகளும், கல்வியும் அளிக்க இதில் பாதி தொகையே தேவைப்படும் என ஐ.நா.வின் புள்ளி விவரத்தை முன்வைத்து இப்படி இருக்கும் போது தீவிரவாதிகள் ஏன் நம்மை தாக்குகிறார்கள் என ஆச்சரியப்படுகின்றோம் என்று அமெரிக்க குடிமக்களை சிந்திக்க சொல்கின்றது இப்புத்தகம்.
இன்னொரு செப்டம்பர் 11 வராமல் தடுக்கவும் தான் செய்த பாவங்களுக்கு விமோசனமாக இந்த செய்தியை எந்த வகையிலாவது பரப்புங்கள் என்கின்ற ஜான் பெர்கின்ஸின் கோரிக்கைகளில் உண்மை இருப்பதாகவே நினைப்பதால் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ சுரண்டலற்ற அமைதியான மகிழ்ச்சியான உலகம் கிடைக்க என்ன செய்யப் போகின்றோம் என்பதை சிந்திக்க செயல்படத் தூண்டுகிறது பெர்கின்ஸின் இப்புத்தகம்.

14.01.2018




No comments:

Post a Comment