17.6.21

இடையர்களே சிந்திப்பீர்களா?

ஒரு சமூகம் எந்தளவுக்கு மத உணர்வால் சீரழிந்துள்ளது என்பதற்கு நிகழ்காலத்தில் யாதவர் சமூகமே சாட்சி.

இந்தக் காணொளியில் தேர்தல் பரப்புரை செய்யும் ஒரு திமுக வேட்பாளரை மடக்கிக்கொண்டு வீரமணி எப்படி கிருஷ்ணரை தப்பாக பேசலாம் என்று கேள்வி கேட்டு பாரத் மாதாகீ ஜே என்று கூட்டமாய் குரல் எழுப்புகிறார்கள்.
தமிழக அரசில் கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்ற ஒன்றிலும்கூட பிரதிநிதித்துவம் கேட்டு போராட்டம் நடத்துவதில்லை. ஆடு மாடுகள் மேய்க்கும் பெரும்பாலோர் இன்னமும் சமூக அரசியல் விவரம் இல்லாமல்தான் இருக்கிறார்கள். அதாவது சாலை விபத்துகள், இடி, மின்னல், மழை வெள்ளத்தால் ஆடு மாடுகள் கூட்டமாக இறந்துபோனால் தாமதமாக கேள்விப்பட்டு, நிவாரணம் பெற நடையாய் நடக்கிறார்கள். வழிகாட்ட ஆளில்லை. ஆடு மாடுகளுக்கு காப்பீடு செய்து வைப்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. ஒரு சிறு பிரச்சினை என்றால்கூட காவல் நிலையமோ நீதிமன்றமோ சென்று நீதிக்குப் போராட துணை நிற்கவும் ஆலோசனை வழங்கவும் வலுவாகவோ சுமாராகவோகூட அமைப்புகளில்லை. தமிழ் மாநிலம் முழுவதும் பரவலாகவும் தென்மாவட்டங்களில் செறிவாகவும் வாழ்ந்தும் அரசியல் ஆர்வமோ பங்கெடுப்போ இல்லாத காரணத்தால் வாக்காளர்களின் பலம் வெளியுலகத்திற்கும் கட்சிகளுக்கும் தெரியாமல் எக்கட்சியிலும் பிரதிநிதித்துவம் கிடைக்காமல்; கோரவும் முடியாமல் இருக்கிறார்கள்.
சமீப வருடங்களில் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.பி.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., நீதிபதிகள் எவ்வளவு பேர்?
இதெல்லாம் யாருக்கும் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் கிருஷ்ணனை ஆசிரியர் வீரமணி தவறாகப் பேசியது மட்டும் உறைக்கிறதாம். ஆசிரியர் வீரமணி ஒன்றும் சொந்தமாய் இட்டுக்கட்டி பேசவில்லை. புராணங்களில் இருப்பதைத்தான் சொல்கிறார்.
விமர்சனம் என்பது ஜனநாயக உரிமை. ஆசிரியர் வீரமணி சந்திக்காத இழிவா? ஒரு பகுத்தறிவாளனுக்கு நாட்டில் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கும் என்பது தெரியாதவரல்ல அவர். தன்னை இவர்கள் ஒருமுறை செருப்பாலடிக்க முயன்றதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. இது கிடக்கட்டும்.
கிருஷ்ணர் உண்மையிலேயே பெரிய சக்தி வாய்ந்தவர் என்றால் இந்த விமர்சனம்தான் அவர் புகழை கெடுத்துவிடுமா? அவ்வளவு பலவீனமானவரா அவர்? நம்பிக்கை வைத்தால் வலுவாக வைக்க வேண்டாமா? யாரோ தூண்டிவிட்டால் சுயபுத்தி வேண்டாமா?
ஆடு மாடு மேய்த்தவர்கள் எல்லாம் எந்தத் தலைமுறையில் படித்தார்கள்? யார் படிக்கச் சொன்னது? எந்த சாமியார் ஆடு மாடு மேய்த்தவர்களுக்காக போராடினான்? எந்த பார்ப்பான் இதற்காக அரசியல் நடத்தினான்? மேய்ச்சல்காரர்களை படிக்கவிடாமல் வைத்தவர்கள் யார்? ஏன்?
'பாரத் மாதா கீ ஜே' என்று கூப்பாடு போட்டு உங்களை இப்படி உசுப்பிவிடும் இவர்கள் மெற்சொன்ன எந்தப் பிரச்சினைக்காகவாவது இதற்கு முன் போராடியிருக்கிறார்களா? மக்களின் எந்தவொரு அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளுக்காவது போராடுகிறார்களா? மதத்தைக் காப்பதும்; மதத்துக்காக சாவதும்தான் உலகில் மக்களுக்கு வேலையா? மனிதர்கள் பிறப்பெடுப்பது இதற்குத்தானா? ஹிந்து மதத்தைக் காப்பதுதான் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு மிக முக்கியமா?
கிருஷ்ணன் பிறந்த ஜாதியென்பதால் மட்டும் யார் மதிக்கிறர்கள்? இன்னும் ஜாதிப்பேரை சொல்லி இழிவாகத்தானே பேசுகிறார்கள்?
முதலில் அவாளாவது மதிக்கிறானா? பார்ப்பான் தன் வீட்டுப் பெண்ணைக் கொடுப்பானா? இல்லை இந்த வீடுகளிலிருந்து பெண் எடுப்பானா? பூஜை செய்ய கோயில் கருவறைகளில் அனுமதிப்பானா? கிருஷ்ணனுக்கும் பூணூல்தானே மாட்டி வைத்திருக்கிறான்?
ஜெகந்நாத் மிஸ்ரா ஆட்சியிலிருந்து தன் ஆட்சிவரையிலும் மாட்டுத் தீவனத்தில் ஊழல் தொடர்ந்துள்ளதை வெளிக்கொண்டு வந்ததே லல்லுதான். ஆனால் மிஸ்ராவை சாதுரியமாக வழக்கிலிருந்து விடுவித்து லல்லுவை மட்டும் சிக்க வைத்தவர்கள் யார்? வெறும் 40 கோடி ஊழலுக்கு 900 கோடியையும் லல்லு மீது சுமத்தி இந்தியாவெங்கும் வெளிவரும் பார்ப்பன ஊடகங்களில் மாடு போன்று படம் போட்டு லல்லுவை கேலிப்படுத்தியவர்கள் யார்? 100 கோடி ஊழல் செய்த பாப்பாத்தி மட்டும் கடைசியில் புனிதமாக்கப்பட்டாளே எப்படி? வெறும் 40 கோடிக்கு இந்தியாவில் எந்த அரசியல்வாதி சிறைக்குள் தொடர்ந்து அடைக்கப்பட்டான்? திட்டமிட்டு தேர்தலில் நிற்காதபடி செய்யப்பட்டான்?
இந்தியாவில் பார்ப்பானையும் பணக்காரனையும் தண்டிக்க முடியாது என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை...!
தெற்கே திராவிட இயக்கங்களுடன் கரம் கோர்த்து சமூக நீதிக்கு வலு சேர்த்து, வட இந்தியாவில் பார்ப்பனீய ஹிந்துத்வ மத அரசியலுக்கு ஒரே சிம்ம சொப்பனமாக இருந்த லல்லுவை திட்டமிட்டு ஒடுக்கியவர்கள் யார்? லல்லுவை ஒடுக்கிய அவர்கள்தான் இன்று கிருஷ்ணனைக் காட்டி அக்கறையாளர்கள்போல உங்களை உசுப்பிவிடுவதை புரிந்துகொள்ள முடியவில்லையா?
வேட்டைத் தொழிலும் மேய்ச்சல் தொழிலும்தான் ஆதியில் இருந்த தொழில். எங்கேயோ இருந்து இங்கு வந்தேறிய ஆரிய நாடோடிகளுக்கு இங்கே இருந்த மேய்ச்சல்காரர்கள் தொல்லையாய் இருந்திருக்கலாம். கூடிக் கெடுப்பது பார்ப்பனீயம் என்பதால் மேய்ச்சல்காரர்களின் தலைவனை பொல்லாக் கதைகட்டி கேலிப்படுத்தி இருக்கலாம். அவன் சொன்னதையெல்லாம் கேள்வியே கேட்காமல் இன்னும் நம்பிக் கொண்டிருப்பதுதான் அவன் வெற்றி.
யாரோ உசுப்பிவிடுவதற்காக ஆசிரியர் வீரமணிக்கு எதிராக உங்கள் ஆற்றலை இழக்காமல் சுய சிந்தனையுடன் சமூகப் பலவீனங்களைப் பட்டியலிட்டு அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகவாவது சற்றேனும் கவனம் வைக்க முயற்சிப்பதே இனியாவது நல்லது.

05.04.2019




No comments:

Post a Comment