முன்பு தனி ஈழம் கேட்டு எழுந்த குரல் பின்பு தமிழர் நிலத்திலிருந்து ராணுவமே வெளியேறு என்று குறுகியது. தனி ஈழக் கோரிக்கையும் வலு இழந்தது. ராஜபக்சேவுக்கு மைத்ரியே மேல் என்று ஆனது.
44 பேர்கள் உடல் சிதறி பலியாக காரணமான தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்ற வேட்கை பின்பு அபிநந்தனை விடுவித்தால் போதும் என்று சுருங்கியது.
ஒருநாடு தன் பழைய கொடூர முகத்தை மறைக்க எப்போதும் எப்படியும் மாறும். இம்மாதிரியான செயலுக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டுமே தவிர உச்சியில் வைத்துக் கொண்டாடி மயங்குவதால் யாருக்கு பயன்?
இன்னும் பல ராணுவ உளவு அதிகாரிகள் பல்லாண்டு காலம் பாக். சிறையில் இருக்கின்றனர். இந்திய சிறைகளிலும் இதேபோல் பாக். ராணுவத்தினர் உள்ளனர். இந்த வாரத்தில் ஒரு பாக். கைதியை இந்திய சிறையில் அடித்துக் கொன்றனர். தங்கள் நாட்டில் தரையிறங்கிய ராணுவ விமானியை இந்தியர் என்று அவர்களே அடித்துக் கொன்றதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கிறது.
இன்று மாலைகூட பாக். ராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒரு இந்திய வீரர் உயிரிழந்ததாக செய்திகள் வருகிறது.
நிற்க, தமிழர்கள் ஏன் இப்படி வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இன்னும் ஆந்திர சிறையில், கர்நாடக சிறையில், இலங்கை சிறைகளில் உதவியின்றி வெளியே தெரியாமல் வாடும் அப்பாவி தமிழர்களை மீட்க ராஜதந்திரமாக காய்நகர்த்தும் ஒரு தலைமையாவது தமிழ்நாட்டில் இருக்கிறதா?
கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது, கண்ணை மூடிக்கொண்டு கொண்டாடுவது இதுதான் தமிழர் முற்போக்குப் பார்வையா? தமிழகமெங்கும் டெல்லியின் ஆதரவோடு சாவகாசமாக நோட்டம் பார்க்கும் இலங்கை அரசின் உளவுத்துறை ஆட்கள் தமிழர்களைப் பற்றி கொழும்புக்கு என்ன செய்தி அனுப்பிக் கொண்டிருப்பார்கள்?
01.03.2019
No comments:
Post a Comment