5.6.21

எழுத்தாளனும் வாசகனும் - Sam Nathan

இன்று உலகப் புத்தக தினம். அனுபவத்தில் சொல்கிறேன். வாசிப்பிற்கும் கேரக்டருக்கும் துளி சம்பந்தமில்லை. தீவிர வாசிப்பு என்பதே ஒருவித மனநோய். உலகத்திற்கு இது எப்படிப் பொருந்துமோ தெரியாது. தமிழ்ச் சூழலில் வாசிப்பெல்லாம் வேலைக்கு ஆகாது. லட்சத்தில் ஒரேயொரு வாசகன் மட்டுமே சென்சிபிளாக இருப்பான். அவனே வாழ்க்கையை வாசிப்பின் வழியாகப் புரிந்துகொள்ள மெனக்கெடுவான். மற்றவர்கள் நூறு புத்தகங்களை வாசித்தாலும் கேரக்டரில் எந்த முன்னேற்றமும் இருக்காது.
தீவிர வாசகர்கள் அல்லது எழுத்தாளர்கள் பலர் புழக்கடை வழியாக மனநல மருத்துவர்களை நாடுவதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். கூடவே வாசக மனதால் எந்த ஒரு நபரையும் மனதார நேசிக்க முடியாது. கற்பனைகளில் வாழும். நிஜத்தைப் புறந்தள்ளும்.
வாழ்க்கையைத் தொலைத்தவன் எவனோ அவனே எழுத்தாளன். வாழ்கையைத் தொலைக்க விரும்புகிறவன் எவனோ அவனே தீவிர வாசகன். ஆனால் இந்த இரண்டுக்கும் சம்பந்தமில்லாதப் பெருங் கூட்டமொன்று விருதாவாக வாசிப்பை ஊக்கப்படுத்தி சீரழிகிறது.
முக்கியமாக எழுத்தாளர்கள் அல்லது ஒரு தனிமனிதனைக் கொண்டாடுவது அல்ல வாசிப்பு. ஆதர்சங்களை காதலிக்கிற அளவில் - அடித்துக் காலி பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஒருவித சித்து விளையாட்டை விளையாடி மகிழ்கிறவர்கள். வலுவிழந்த மனங்களை எழுத்தின் வழியில் அறுவடை செய்து அவர்களை காலத்திற்கும் துதிபாடச் செய்வது நோக்கம். வாசகர்களின் கண்ணோட்டத்திலிருந்து விமர்சனங்களே உருவாகாமல் பார்த்துக்கொள்வது. இதற்குப் பலியான வாசகர்கள் ஆயுளுக்கும் குருட்டு நம்பிக்கையில் கடவுளைத் தொழும் பேதைகளின் மனப்போக்கில் எழுத்தாளனை ஆராதிப்பார்கள்.
பொதுவான ஒரு கேள்வி. என் வாழ்க்கையை மாற்றினார். என்னைப் புரட்டிப் போட்டார் போன்ற டெம்ப்ளேட் மொழிகளை சிலாகிக்கும் வாசகர்களைக் கேளுங்கள். ஒரு எழுத்தாளன் உங்களைப் புரட்டுவதற்கு முன்னால் நீங்கள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தீர்கள்! கொலை குற்றம் செய்தீர்களா. சிறைக் கைதியா. வாழ்க்கையைத் தொலைத்தீர்களா! சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டீர்களா! பிச்சை எடுத்தீர்களா! ம்ம்ஹும் ஒன்றுமே இருக்காது. மாறாக சாமானியர்களை விட சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்களுக்கு இந்தக் கூமுட்டைகளைப் பிடிப்பதே லட்சியம் - இவர்களுக்கு எழுத்தாளர்களை வழிபடுவது சுகம்.
அசலான அனுபவத்தை நான்கு சுவருக்கு வெளியில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் கற்றுத் தருவான். சொந்த அனுபவம் ஒன்றே சமயங்களில் கைகொடுக்கும். பிரயாணம் தராத ஒரு படிப்பினையை புத்தகம் தரவே தராது. கற்பனையை வாசிப்பின் வழியாக ரசிக்கலாம். பொழுதுபோக்கலாம். ஆனால் வாழ்க்கை அதற்கு எதிர் திசையில் நின்று சவால் விடும்.

Sam Nathan

23.04.2018

No comments:

Post a Comment