4.6.21

தூய்மை பணியாளர்களின் அவலநிலை

கோவை மாநகராட்சியில் 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. 40-ஐ கடந்த வயதுக்காரர். சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக, "குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடா?" என்று மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன் என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை கைதுசெய்ய வேண்டும்' என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர்.

“இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்திருப்பேன் சார். 'தூக்குல தொங்கிடலாமா’னு இருக்கு..
எங்களை மத்தவங்க நடத்துற விதம்தான் எங்களால ஜீரணிக்கவே முடியலை. காலையில எழுந்து குளிச்சு, சாமி கும்பிட்டுட்டுத்தான் நாங்களும் வேலைக்கு வர்றோம். ஆனா, குப்பை வண்டியைப் பிடிச்சுக்கிட்டு தெருவுல நடக்க ஆரம்பிச்சதும் "ஏ… குப்பை இங்க வா!" "குப்பைவண்டி... கொஞ்ச நேரம் நில்லேன்" இப்படித்தான் எல்லாரும் எங்களைக் கூப்பிடுவாங்க. அந்த நிமிஷம் எங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? அந்தக் குப்பை மாதிரிதான் நம்மளையும் நினைக்கிறாங்கனு தோணும். தோணுறதென்ன அப்படித்தான் நினைக்கிறாங்க.
பெரும்பாலான வீடுகள்ல மாடியில நின்னுக்கிட்டு குப்பையைத் தூக்கிப் போட்டு 'கேட்ச்' பிடிச்சுக்கச் சொல்வாங்க பாருங்க, அதைவிட வேதனை எதுவும் இல்லை. அப்படித் தூக்கிப் போடுறவங்க சிலபேருக்கு எங்க மேல கரிசனம் இருக்கும். அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா? `நீ தள்ளி நின்னுக்கோ நான் ஓரமா போடுறேன் விழுந்ததும் எடுத்துக்கோ'ம்பாங்க...
"காலங்காத்தால நாங்க குப்பை வாங்கப் போகும்போது, சில வீடுகள்ல நாய்குட்டியை மடியில தூக்கிவெச்சு கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க. நாங்க போனதும் குப்பையைக் கையிலகூடத் தொடாம முகத்தை ஒருமாதிரி சுளிச்சுக்கிட்டு பலபேர் அவங்க வீட்டு குப்பையையே தொடமாட்டாங்க. அய்யோ… எங்க கொடுமையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா இந்த நாள் பத்தாது சார். நாங்க காலையில வண்டி தள்ளிக்கிட்டு வரும்போது, `வணக்கம் மேடம்! வந்து குப்பை வாங்கிக்கோங்க’னு சொல்லணும்னு சொல்லல'
சக மனிதன் மனிதனாகவே மதிக்கலைங்கறதவிட அவமானம் என்ன இருக்கப்போவுது போலீஸ் ஸ்டேஷனில் நின்றபடி சிறுபிள்ளையைப்போல அழும் மணியின் கண்களிலிருந்து உருகி வழிகிறது ஆண்டாண்டுகால அவமானம்.
Courtesy : suki choza / Abdul Vahab

19.03.2018


No comments:

Post a Comment