4.6.21

"கடவுள்" - சுஜாதா

(ப-272, வி-230/-)

மனிதன் சிந்திக்கத் துவங்கிய காலத்திலிருந்து அவன் விடைதேடிக்கொண்டிருக்கும் சில கேள்விகள்..…
 இந்த உலகம் எப்படி தோன்றியது?
 உலகத்தைப் படைத்தது யார்?
 இவ்வுலகம் தானாய் தோன்றியதா? கடவுள் படைத்தாரா?
 கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா?
 கடவுள் எப்படி உண்டானார்?
 மனிதன் எப்படி உருவானான்?
 இயற்கையை இயக்கும் விதி எது?
 இறந்த பின்பு மனிதன் என்னவாகிறான்?
 மறுபிறப்பு உண்டா?
இவ்வாறான கேள்விகளுக்கு இவ்வுலகில் மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தை சொல்கிறது. ஏதோவொரு காலகட்டத்தில் இயற்கையைப் பற்றிய; மரணத்தைப் பற்றிய பயத்தின் அடிப்படையில் கற்பனையில் உருவாக்கப்பட்ட மதக் கருத்துக்கள், அறிவியல் வளர்ந்த இக்காலத்திலும் மாற்றத்திற்கு ஆளாகாமல் மக்கள் நம்பும்படி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது பரிதாபம்தான். உலகம் தோன்றியபோது இருந்தவனும் அல்லது முதல் மனிதனும் இப்போது இல்லை. செத்துப்போன எவனும் மீண்டும் உயிருடன் வந்து எதைப் பற்றியும் சொல்லவில்லை. இப்படி மதங்கள் சொல்வதெல்லாமும் பொய்தான். ஏனெனில் இடி, மழை, புயல், கிரகணம், அமாவாசை, பௌர்ணமி, நோய்கள், மரணம் என இயற்கை எல்லா காலத்திலும் ஒரே மாதிரிதான் பயணித்துக் கொண்டிருக்கிறது. முன்னர் செத்துப்போய் எவனாவது மீண்டிருந்தால் இப்போதும் அது சாத்தியம்தான்.
“கடவுள் இருக்கிறது”, “மறுபிறப்பு இருக்கிறது” என்பதில் ஒன்றுபடும் அநேக மதங்கள் அதற்கு அடுத்தபடியாக அது எந்த கடவுள்? எவ்வாறானது மறுபிறப்பு? என்பதில் ஒன்றுபடவில்லை. ஆளுக்கொரு கடவுள், ஆளுக்கொரு வரலாறு, ஆளுக்கொரு கணிப்பு என வேறுபட்டே பயணிக்கிறது. இதோடுமட்டுமின்றி தங்களை நம்பும் மக்களுக்குள் மோதல் வளர்த்து அடித்துக்கொண்டும் சாக வைக்கிறது. தம் அறிவைக்கொண்டு எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் சுய அறிவை வளரவிடாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் யாரோ சில அரை அறிவாளிகளால் உணர்ந்து பரப்பப்பட்ட அதே ஒரே கருத்துக்களே இன்றைக்கும் ஒவ்வொரு மதத்திலும் பல்லாயிரம் சாமியார்களை உருவாக்கி கொழுத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு மெத்தப் படித்தவனும் அறிவாளியும்கூட தம் மத நம்பிக்கைகளுக்குப் பின்னர்தான் தம் சுய அறிவையும் அறிவியலையும் நம்புகிறார்கள்.
இப்புத்தகத்தில் சுஜாதா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அதற்கு முன்பு அடுத்துவரும் கார்ல் மார்க்சின் சில மேற்கொள்களை சற்று கவனிப்போம்.
01. “நாத்திக ஆத்திக விவாதங்கள் பொதுவில் பகுத்தறிவு, தத்துவ நோக்கில் மட்டும் நடக்கும். ஆனால் கடவுளின் நிலையை வானில் இருந்து அல்ல பூமியில் இருந்து கொண்டு மட்டுமே விளக்க முடியும். மனிதன் வர்க்க ரீதியாக முரண்படும் சமூக வாழ்வின் வழியே தன்னை இழப்பதால், கற்பனையான ஆன்மீகத்தில் தன்னை பெற முயற்சிக்கிறான். இயற்கையின் இயக்கத்தை மேலும் மேலும் புரிந்து கொள்ளும்போது கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறார். இயற்கை குறித்த பிரம்மாண்டத்தை அறியாததால் கடவுளுக்கு அளிக்கப்பட்ட வலுவான ஆயுதங்கள் அதே இயற்கைய குறித்து அறியும்போது ஒவ்வொன்றாய் உதிர்கின்றன”
02. “ஒருவர் மேக மண்டலங்களுக்கு இடையில் சஞ்சரித்தால் ‘வானத்தின் பந்தலைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவர’ முடியாது. அதற்கு அவர் பூமியில் நிற்க வேண்டும். மதத்தின் மூல வேர்கள் “பூமியில்” இருக்கின்றன. மதஞ்சார்ந்த அவல நிலை சமூக உறவுகளின் மெய்யான அவல நிலையின் வெளியீடுதான். அவை அதை வளர்க்கின்றன.”
03. “மதம் என்பது தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத அல்லது மறுபடியும் தன்னை இழந்து விட்ட மனிதனின் சுய உணர்வு மற்றும் சுய மதிப்பே ஆகும். மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆள்கின்ற மனிதத் தன்மையற்ற உலகத்தின் உற்பத்தியே அது.”
04. “தலைகீழாக இருக்கும் உலகம், தலைகீழான உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. கண்ணீர்க் கடலில் மிதக்கும் பொழுது தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத மனிதன் மறு உலக வாழ்க்கையைப் பற்றிக் கற்பனையான கனவுகளில் ஆறுதல் தேடுகிறான். பூமியில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்பதால் சொர்க்கத்திலிருக்கும் இன்பங்களைப் பற்றிய சமயப் பிரசங்கங்களில் நம்பிக்கை வைக்கிறான்.”
05. “மனிதன் தன்னுடைய விடுதலைக்காகவும் இயற்கையை எதிர்த்தும் நடத்துகின்ற போராட்டத்தில் பலவீனத்தையும் ஆதரவற்ற நிலையையும் உணர்கிறான். எனவே கடவுளுக்கு வலிமையையும் எல்லாம் வல்ல தன்மையையும் தருகிறான். மனிதன் பூமியில் தன்னுடைய வாழ்க்கையின் அவல நிலைக்குப் பரிகாரத்தைக் கடவுளிடம் தேடுகிறான். அதனால்தான் அக்காலத்திய மதம் “இதயமற்ற உலகத்தின் இதயமாகவும்” “உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும்” இருப்பது மட்டுமின்றி, இந்த உலகத்துக்கும் அதன் நிலைமைகளுக்கும் எதிர்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு மெளனமானதே. அது அடிமையின், “ஒடுக்கப்பட்ட பிறவியின் பெருமூச்சே”; சமூக மற்றும் தனிநபருடைய அவல நிலை தெய்வீகத் தன்மைக்கு எதிரான ஒன்றல்ல, அதன் அத்தியாவசியமான குணாம்சமாக இருக்கிறது. ஒன்று மற்றொன்றை வளர்க்கிறது, நிர்ணயிக்கிறது.”
மார்க்சின் மேற்கோள்கள் முடிந்துவிட்டது.
உலகிலேயே இன்றளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட ’ஒன்று’ அல்லது ’ஒருவர்’ அல்லது ’ஒரு கருத்து’ இந்த ’கடவுள்’ என்பதாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் கடவுள் என்பது அவனது நம்பிக்கையின் அடிப்படையில் மாறுபடுகின்றது. இந்த நம்பிக்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சிறுவயதிலிருந்து ஊட்டப்பட்டதாக இருக்கலாம். அல்லது நாமே வளர்த்துக் கொண்டதாகவும் இருக்கலாம். மேலும் பலருக்கு இந்த ’கடவுள்’ என்ற நம்பிக்கை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலும் இருக்கலாம்.
• உண்மையாகவே ‘கடவுள்’ என்றால் என்ன?
• எது கடவுள் என்று நம்பப்படுகின்றது?
• இன்ன மதத்திற்கு இன்ன கடவுளென்று நிர்ணயித்தது யார்?
• கடவுளுக்கு உருவம் உண்டா? இல்லையா?
• இந்த பிரபஞ்சம் தோன்றி, இயங்கிக் கொண்டிருப்பதற்கு கடவுள் தான் காரணமா?
• உயிர்களைப் படைத்தது கடவுளா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தத்துவ ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ ஒரு முழுமையான விடையை யாரும் அளித்துவிடக்கூடுமா?
நிச்சயமாக முடியாது..!!
முடிந்தவரையில், நம்மிடமுள்ள நிரூபிக்கப்பட்ட உண்மைகளை ஒரு புறமும் அனுமானங்களை மற்றொரு புறமும் வைத்துக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கலாமேயன்றி இன்னது கடவுளென்று வரையறுப்பது கடினமே.
சரி… கடவுள் இருப்பதாகவே வைத்துக் கொண்டால் மனிதர்களாகிய நமக்கு அதனால் என்ன பலன்?
”நமக்கும் மேலே சக்தி படைத்த ஏதோ ஒன்று / ஒருவர் இருக்கின்றார். அவர் நம்மை வழிநடத்துவார்” என்கிற நம்பிக்கை ஏதோவொரு வகையில் ஒவ்வொருவருக்கும் தேவையாயிருக்கின்றது. நமது பொறுப்புகளையும் மனச்சுமையையும் குறைத்துக்கொள்ள இந்த நம்பிக்கை உதவுகின்றது. நிற்க,
இப்படி எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம் என்றும்… அவரை மீறி இங்கு எதுவுமில்லை என்றும் மனிதகுலம் கண்மூடித்தனமாக நம்பியிருந்தால் அறிவியல்ரீதியான இந்த முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்குமா?
சுஜாதா என்ன சொல்கிறார்?..
ஹிந்து, பௌத்தம், ஜைனம், கிறித்தவம், இஸ்லாம், சீக், சூஃபியிசம், ஷிண்டோ, தாவ், ஜென், கன்ஃபூஷியஸ், ஜூடாயிசம்… என உலகில் தற்போது மக்கள் பின்பற்றிக்கொண்டிருக்கும் எல்லா மதங்களும் தோன்றியது பற்றியும் அதன் முக்கிய கருத்துக்கள் பற்றியும் துவக்கத்தில் தெளிவாக விளக்குகிறார். பின்னர் அறிவியல் விதிகள் / அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பற்றியும் விவரிக்கிறார். தேவைப்படும்போதெல்லாம் ஹிந்து மத வைதீகக் கருத்துக்கள் பற்றி அழகாக மேற்கோள் காட்டுகிறார். புத்தக இறுதிவரையில் எங்கேனும் தப்பித்தவறியும் மார்க்சியம் பற்றியோ மார்க்ஸ் பற்றியோ ஒரு வார்த்தையில்லை. கவனமாகத் தவிர்த்திருக்கிறார். ஏனென்றால் மேலே இருக்கும் மார்க்சின் மேற்கோள்களை மீண்டும் ஒருமுறை வாசித்தால் புரியும். இயற்பியலும் உலக மதங்களும் தெளிவாகப் புரிந்த அவருக்கு மார்க்சியம் புரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.
சுஜாதா இப்புத்தகத்தில் எழுதியவைகளில் சிலவற்றை கவனிப்போம்…
10 உபநிஷத்துகள் முக்கியமானது என்றும் அதில் முண்டகோபனிஷத், கேனோபஷனித் (சாமம்), ஈசோபநிஷத் (யஜூர்) –களையும் சகஸ்ரநாமத்தையும் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். இன்றைக்கு அறிவியல் உலகில் எழுப்பப்படும் பல கேள்விகளும் உபநிஷத்துகளில் இருப்பதாக சொல்கிறார்.
அணுக்களின் இயக்கத்தைப் பற்றி ஓரிடத்தில், (260-ம் பக்கத்தில்) “நவீன பௌதிகத்தில் சிவதாண்டவம் அணுக்களின் உட்கருவுக்குள் சதா நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று சிவதாண்டவத்துடன் ஓப்பிட்டுக் குறிப்பிடுகிறார். மேலும் 244-ம் பக்கத்தில், “ரிலேட்டிவிட்டி விதிப்படி பிரம்மலோகம் சாத்தியமே. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி மூலம் பிரம்மலோகத்தின் வேகத்தை சரியாகக் கணக்கெடுக்கக்கூட முடியும். ஐன்ஸ்டீன் போன்ற சிந்தனையாளர்கள் வேதகாலத்திலும் இருந்திருக்கிறார்கள்” என்றும் எழுதியிருக்கிறார்.
பல கருத்துக்களை மிகவும் நாசூக்காக கையாண்டிருக்கிறார். அடிக்கடி ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்த செய்யுள்களையும் சுட்டிக் காட்டுகிறார்.
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.
– 2125, பொய்கையாழ்வார்
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத் தெம்மானைக்கூறுதலே.
- 3062, நம்மாழ்வார்
பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர்
- 3032, நம்மாழ்வார்
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
- 2786, நம்மாழ்வார்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே
- 2788, நம்மாழ்வார்
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே
- 3634, நம்மாழ்வார்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்யுள்களில் ஆழ்வார்களின் கற்பனையும் சிந்தனையும் ஆழமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் இப்படி வெகு ஆழமாக உணர்வுநிலையில் சிந்தித்தவர்கள் இறுதியில் எப்படி வைதீக வர்ணாசிரம பிடிக்குள் சுருங்கினார்கள் என்று தெரியவில்லை. இத்தமிழ்ப் புலவர்களின் கற்பனை ஒப்பில்லாதது. இவர்களுடன் ஒப்பிடும் அளவிற்குக்கூட எதுவுமில்லாத வேதங்களிலும் உபநிஷத்துகளிலும்தான் எல்லாமும் இருப்பதாக பலரும் இன்னும் ‘பில்டப்’ கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். யார் அவர்கள்?
அடுத்து நம்ம பாரதியார் வரிகளை கவனிப்போம்…
“வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே”
“வேத வுப நிடத மெய்நூல்க ளெல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே”
“வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரததேவி!”
அடுத்ததாக டாக்டர். அம்பேத்கர் சொல்வதைக் கவனிப்போம்…
“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண வைதீக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”
அடுத்த்தாக துரோகி பெரியார் சொல்வதை கவனிப்போம்…
“ஒரு பார்ப்பான் வாய் அசைந்து எதைப் பேசினாலும் அதையே அத்தனை பார்ப்பனர்களும் பேசுவார்கள்! பார்ப்பான் ஒருவனை அயோக்கியன் என்றால், அத்தனை பார்ப்பானும் அவனை அயோக்கியன் என்பான். சுத்த அறிவு சூன்யமான ஒருவனை ஒரு பார்ப்பான் மகரிஷி என்று கூறினாலும், அத்தனை பார்ப்பானும் பகவான் மகரிஷி என்பான். பத்திரிகைக்காரர்கள் எல்லாம் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றார்கள் என்றாலும், பல இன்னல்களுக்கு இடையே எதிர்ப்புகளுக்கும் இடையேதான் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றேன்.”
“பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்களின் சில பழக்க வழக்கங்களைத்தான் எதிர்க்கிறோம். அவர்கள் மனதுவைத்தால் அதை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும். அதில் பலாத்காரத்திற்கு இடமில்லை.”
'எனக்கு எந்த சமுதாயம் மீதும் குரோதம் இல்லை. சமுதாயத்தில் பார்ப்பனர்கள் அனுபவிக்கிற உயர்வு மீதுதான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இங்கே யாவரும் ஒருதாய்ப் பிள்ளைகள் என அவர்கள் கருதுவார்களேயானால் நான் போராட தேவையே இருக்காது.”
“பார்ப்பான் மேல்சாதியாக இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணமே தவிர, அவன் பணக்காரனாக இருக்கக்கூடாது, நல்வாழ்வு வாழக்கூடாது என்பது என் எண்ணமில்லை”
இறுதியாக…,
‘ஒரு புத்தகத்தைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு மேற்கோள்கள்…?’ என்று இதைப் படிக்கும் யாரும் யோசிக்கக்கூடும்.
பிரபஞ்சத்தின் புதிர்கள் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அவிந்துபோய்விடும். அப்போது நாமிருக்க மாட்டோம். அப்போதும் அன்றைய நவீன அறிவியலுடன் ஒப்பிட்டு “சுஜாதா” போன்ற மாபெரும் அறிவாளிகள் இதேபோல் புத்தகம் எழுதி வேதங்களுக்கு பால்வார்த்துக் கொண்டிருக்கக் கூடும்; அதனால்தான்.
26.03.2018




No comments:

Post a Comment