17.6.21

மாற்றம் தேவை

கடந்த முறை 01 எம்.பி. கூட திமுக சார்பில் வெற்றிபெறவில்லை. கலைஞர் தன் கடைசிக் காலத்தில் சந்தித்த பெரும் தோல்வி இது. தொடர்ந்து இரண்டு முறை மாநில தேர்தலில் தோல்வி & பெரும்பான்மை இல்லை. அதிமுக சார்பில் 37 எம்.பி.-க்கள் இருந்தும் ஒரு பயனுமில்லை.

தமிழர்கள் ஏன் திமுக-வை ஓரங்கட்டினர் என்று அக்கட்சியின் மேலிடம் இப்போதும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நில அபகரிப்பு, ரவுடித்தனம், ஊழல், மா.செயலாளர்களிலும் வாரிசு முறை, சாகும்வரை ஒருவரே மாவட்ட செயலாளர் / ஒருவரே எம்.எல்.ஏ. / ஒருவரே எம்.பி. என கூச்சமில்லாமல் நிற்க வைக்கிறார்கள். இப்போதும் அநேகமாக எல்லா தொகுதிகளிலும் அதே பழம் பெருச்சாளிகள்தான் போட்டியிடுவார்கள்.
காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திமுக இன்று அதே காங்கிரசுக்குதான் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டதில் திமுக, அதிமுக ஆகிய இரு பெருச்சாளிகளுக்கும் சமபங்கு இருக்கிறது. இருவருமே இதற்காகத் துளியும் போராடவில்லை.
யாரை வேண்டுமானாலும் கடத்தலாம் கொல்லலாம் எனும்படியான காவல்துறையின் எதேச்சதிகாரம் முன்பைவிட இன்று அதிகமாகிவிட்டது. சட்டத்தின் மீது அவர்களுக்கு பயமில்லை. திமுக வந்தாலும் காவல்துறை மாறிவிடப்போவதில்லை. இந்நிலையில் பழைய திமுக பெருச்சாளிகளே மீண்டும் பதவிக்கு வந்தால் பேராபத்து.
படித்த, கொள்கை பிடிப்புள்ள, நேர்மையான நடத்தையுள்ள, செல்வந்தராக இல்லாத புதியவர்களுக்கு திமுக-வில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சிறிதாவது மாற்றத்தை எதிர் பார்க்கலாம். ஆனால் இது பகல்கனவுதான். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியிடமிருந்து தமிழகத்திற்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. திமுக, அதிமுக வேட்பாளர்கள் எல்லார் மீதும் இருக்கும் ஏதேனுமொரு வழக்கு தமிழ்நாட்டை டெல்லிக்கு தானாக குனிய வைக்கிறது.
பணம் பெருத்த பழம்பெருச்சாளிகளேதான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவார்கள் எனில், வழக்கம்போல எல்லாவற்றுக்கும் எப்போதும்போல தோழர் முகிலன் போன்ற சமூக அக்கறையாளர்கள்தான் தினமும் போராடியாக வேண்டும், சாக வேண்டும்.
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து போராடும் புதியவர்களுக்கு / சமூக அக்கறையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ஜாதி மதத்தை காரணம் காட்டி தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கும் திருடர்களுக்கும் முட்டு கொடுப்பது சீரழிவை ஆதரிப்பதேயாகும்.
சாகும்வரை ஒரே கட்சியைத்தான் ஆதரிப்பேன் என்பவர்கள் உள்ளவரை மாற்றங்களுக்கான வாய்ப்பு குறைவுதான். தொடர்ந்து பதவியை அதிகாரத்தை சுவைத்த பெருச்சாளிகளைப் போல தேர்தல்காலங்களில் எல்லாம் பிரியாணி, சரக்கு, கட்டிங் என்று தொடர்ந்து சுவைத்த ஒரே கட்சி அடிமைகளும் மாற வாய்ப்பில்லைதான். இதிலும் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் தன் ஜாதிக்காரனுக்கு மட்டும்தான் தன் வாக்கு என்று கமுக்கமாய் செலுத்திவிட்டு பின்னர் ஆண்டு முழுதும் நாட்டைப் பற்றி அதீத அக்கறையாய் பேசுவோர் தனிரகம்.
புதிதாய் வாக்களிக்கும் படித்த இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும்தான் தமிழ்நாட்டின் ஆபத்தான சூழலை உணர்ந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

11.03.2019



No comments:

Post a Comment