17.6.21

நாம் தமிழர் - தொடரும் விலகல்கள்

 நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த காலத்திலிருந்து சீமானுக்கு பக்கபலமாய் இருந்து தீவிரமாக செயற்பட்ட ஒவ்வொருவரும் விலகிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இன்னொருவரும் விலகுகிறாராம்.

நக்கலாய் பேசுவது, கிண்டலடிப்பது, தவறான புள்ளி விவரங்களை அள்ளி விடுவது, அரவணைப்புத் தன்மையோ தோழமை உணர்வோ இன்றி ஆணவமாய் ஆபாசமாய் பேசுவது, பேச்சால் மட்டும் தொண்டர்களை வசப்படுத்துவது என்றுதான் சகோதரர் சீமான் அவர்களின் செயல்பாடு உள்ளது. திராவிட இயக்கங்களை கட்சிகளை குறை சொல்லும் அவர் அவர்களிலிருந்து எதில் வேறுபட்டு நிற்கிறார்? வேட்பாளர் பட்டியல் வெளியீட்டைச் சொல்லலாம். இதுபோல ஆரம்பகால கட்டத்தில் திராவிடக் கட்சிகளும்தான் புரட்சி செய்தது. இன்று..?
திராவிடக் கட்சிகளில் தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்டது அதிமுக-தான். அதைவிட திமுக குறைவாகத்தான் பதவியில் இருந்தது. திமுகவின் காலத்தில்தான் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்தது. வெறும் கவர்ச்சி அரசியலில்தான் அதிமுக காலந்தள்ளியது. திமுகவுடன் ஒப்பிட்டால் அதிமுகவின் சாதனைகள் மிகக்குறைவு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னேற்றங்களை திமுக கொண்டுவந்துள்ளது. தேர்தல் அரசியலின் வழமையான சில சீரழிவுகளில் திமுகவும் சிக்கியது உண்மைதான். பரம்பரையாக தொடர்ந்து கட்சிப் பதவிகளில் சிலர் மட்டுமே இருப்பதைச் சொல்லலாம். நாத்திகம், பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்திய காரணத்தால் இந்தியாவின் எல்லா பார்ப்பன ஊடகங்களாலும் திமுக மீதும் கலைஞர் மீதும் குறிவைத்து நிரூபிக்கப்படாத பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவதூறாக பூசப்பட்டன. விவரம் தெரியாத பலர் அதை உண்மை என்று நம்பினர்.
தமிழகத்தை அதிகம் ஆண்டு சீரழித்த அதிமுகவை விடவும் ஓரளவு வளர்ச்சிக்கு வித்திட்ட திமுக மீது மட்டும் ஏன் சீமானுக்கு இந்த அக்கறை? தமிழகத்தின் தனிச்சிறப்பே திராவிட இயக்கம்தான். அதன் எந்தக் கொள்கைகள் சீமானுக்கு உடன்பாடில்லை? எது அறிவுக்கு ஏற்பில்லாதது?
திராவிடத்தின் பெயர்க் காரணம் பலமுறை தெளிவாகச் சொல்லப்பட்டும் ஒரே கேள்வியில் முட்டிக்கொண்டிருப்பது ஏன்? திராவிட இயக்கம் ஊட்டிய அளவுக்கு தமிழ் உணர்வை இங்கே ஊட்டியது யார்?
திராவிட இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டதோ அதில் அது தெளிவாக இருக்கிறது. சீமானின் நோக்கம் என்ன?
கலைஞரால்தான் ஈழப்போரில் பின்னடைவு என்று அவர் நம்பிக் கொண்டிருந்தால் அது அவரது குறுகிய உலக அரசியல் பார்வையைத்தான் காட்டுகிறது. தமிழ்நாடு தனிநாடாக இருந்து முப்படைகள் இருந்து கலைஞர் அமைதியாக இருந்திருந்தால் இப்படி நம்புவது சரிதான். இந்தியாவை நம்பி தனி ஈழக்குரல் ஒலிக்கவில்லை. ராஜீவ் மரணத்திற்குப் பிறகு இந்தியா எப்போதும் என்ன முடிவு எடுக்கும் என்பதை புலிகள் அறியாதவர்களில்லை. இதுதொடர்பாக இந்தியாவை ஆதரவு சக்தியாக திருப்ப புலிகள் எங்கனம் முயற்சித்தார்கள் என்பது தெரியவில்லை. வெறுமனே திமுக மீது குற்றம் சாட்டிவிட்டுக் கடந்துவிட முடியாது. தமிழக தமிழர்களின் முன்னேற்றத்திற்கு புலிகளைவிடவும் திமுக உழைத்துள்ளது.

No comments:

Post a Comment