போர் வந்தால் வெடிபொருட்கள் ஒருநாள்கூட போதாது என்று முன்னர் இந்திய ராணுவ தளபதி சொன்னதும், உண்பதற்கு எல்லைப் பணியில் ரொட்டிகூட கிடைக்கவில்லை என்றொரு இந்திய ராணுவ வீரர் சொன்னதையும் நினைவு கொள்ளுங்கள்.
இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே ஊழல் மலிந்த சுயநல, பணக்கார, முட்டாள் அரசியல்வாதிகள் ஆளும் நாடுகள். போர் வந்தால் சாகப்போவது இருதரப்பு மக்களும் அப்பாவி ராணுவ வீரர்களும்தான். போருக்கு உத்தரவிடும் அரசியல் நரிகள் எல்லாம் தங்கள் குடும்பங்களையும் வாரிசுகளையும் பாதுகாப்பாய் காப்பாற்றிக்கொண்டு இப்போதுபோலவே அதிகாரத்தைப் பிடிப்பதிலும் ஊழல் செய்வதிலும்தான் குறிக்கோளாய் இருப்பர். பலியாகும் உயிர்களால் எங்கும் எதுவும் மாறப்போவதில்லை.
பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகளுக்கு பல்லாயிரம் உயிர்களை பலியிட துடிப்பது மூடத்தனம். பலியிட்டும் இப்பிரச்சினைகளை தீராமல்தான் இருதரப்பினருமே வைத்துக்கொள்வர். இனி போர் வந்தால் இரு நாடுகளுமேதான் அழியும்.
ராணுவமே இல்லாத நாடுகளும் உலகில் இருக்கிறது, அங்கெல்லாம் மக்கள் அமைதியாகத்தான் வாழ்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிலும் ஜாதி மதத்தின் பின்னால் நின்று மட்டுமே அரசியல் நடத்தப்படும் மட்டமான அறிவற்ற நிலையே தொடர் தீராப் பகைக்கு காரணம். இத்தீராப் பகையே இருதரப்பு அரசியல் கொள்ளையர்களுக்கும் முதலீடு.
அரசு நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டி நியாயமான கேள்விகள் எழுப்பி இனி இதுபோல் நடைபெறா வண்ணம் எச்சரிக்கை செய்வது அறிவுள்ள மக்களின் உரிமை. இது தேச விரோதமல்ல. தேசபக்தி எனும் மயக்கத்தால் அரசின் குறைகளைப் பேசாமல் விடுவது திறமையற்ற அரசியல்வாதிகளுக்கே சாதகமாகும்.
எவனோவொரு மூட பயங்கரவாதி செய்த கொடூரத்திற்கு உள்நாட்டில் வாழும் முஸ்லீம்களை எல்லாம் எதிரியாக நிறுத்தி பலரும் ஆவேசப்படுகிறார்கள். இதற்கு எதிர்வினை ஆற்றுகிறேன் பேர்வழி என்று ஹிந்துத்வாவின் தூண்டிலில் தானாய் வந்து சிக்குகிறார்கள் முஸ்லீம் அடிப்படைவாத ஆதரவாளர்களும்.
No comments:
Post a Comment